Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயற்கை வளங்களைப் பாதுகாக்க தனி ஆணையம்: ஜெயலலிதா அறிவிப்பு

இயற்கை வளங்களைப் பாதுகாக்க தனி ஆணையம்: ஜெயலலிதா அறிவிப்பு
, சனி, 28 ஜூன் 2014 (08:40 IST)
மலைப் பிரதேசங்கள், வனப் பகுதிகள், அருவிகள் உள்ளிட்ட இயற்கை எழிலைப் பாதுகாக்கும் வகையில் தனி ஆணையம் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதற்கான சட்ட மசோதா சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

"சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்து இழுக்கக் கூடிய பகுதிகளான மலைப் பிரதேசங்கள், வனப் பகுதிகள் மற்றும் அருவிகள் விழும் பகுதிகளில் இயற்கையைப் பேணிக் காப்பதற்காக இப்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்தும், அவற்றை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும், சுற்றுலாப் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் வசதிகள் குறித்தும் எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், பத்து அம்சங்கள் அடங்கிய செயல் திட்டம் வகுக்கப்பட்டது.

அதன் விவரம்:

வனப் பகுதிகள், அருவிப் பகுதிகள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள இயற்கை எழிலைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் கூர் உணர்வு மற்றும் பாரம்பரியமிக்க பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் என்ற அமைப்பு எனது தலைமையில் ஏற்படுத்தப்படும். இதற்கான சட்ட மசோதா வரவிருக்கும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும்.

இந்த ஆணையம் சுற்றுச்சூழல் கூர் உணர்வு மற்றும் பாரம்பரியமிக்க அனைத்துப் பகுதிகளையும் பாதுகாக்கத் தேவையான அதிகாரங்களைக் கொண்டதாக அமையும்.

குற்றால அருவியின் தூய்மையைப் பாதுகாக்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

குற்றாலம் பகுதியில் தேவையான விளக்குகள் பொருத்தப்படுவதோடு, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

பழைய குற்றாலம் மற்றும் பிரதான அருவி பகுதிக்கு இடையே மினி பஸ்கள் இயக்கப்படும்.

குற்றாலத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படும்.

சுற்றுலாப் பயணிகள் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போட வசதியாக, ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும்.

குற்றாலத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான பழைய குடில்கள் இடிக்கப்பட்டு, அடுக்குமாடிக் கட்டடம் கட்டப்படும். இந்தக் கட்டடம் சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து வசதிகளுடன் இருக்கும்.

குற்றாலத்தில் மகளிர் கழிவறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் கூடுதலாகக் கட்டப்படும்.

குற்றாலத்தின் முக்கியப் பகுதிகளான பஸ் நிலையம், அருவிப் பகுதிகள், வாகன நிறுமித்துடங்கள் போன்றவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்" என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil