Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராசாவுக்கு திகார் அறை; திருச்சி சிவாவுக்கு கன்னத்துல அறை

ராசாவுக்கு திகார் அறை; திருச்சி சிவாவுக்கு கன்னத்துல அறை
, சனி, 15 அக்டோபர் 2016 (15:24 IST)
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் திமுக தலைவர் கருணாநிதியை சாடி கருத்துப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
 

 
முதலமைச்சர் ஜெயலலிதா நிர்வகித்து வந்த அனைத்துத் துறைகளையும் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதலின் பேரில் வழங்கப்படுவதாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவித்திருந்தார்.
 
இதனையடுத்து கடந்த 12ஆம் தேதி, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டிருந்த அறிக்கையில், ’முதலமைச்சர் தனது இலாக்களை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா என்ற கேள்வி ஒரு சிலரிடையே எழுந்துள்ளது’ என்று சந்தேகம் கிளப்பி இருந்தார்.
 
மேலும் அந்த அறிக்கையில், ’அதிமுகவின் சார்பில் மாநிலங்களவையில் அண்மைக் காலம்வரை உறுப்பினராக இருந்த ஒரு அம்மையாரே [சசிகலா புஷ்பாவை இவ்வாறு மறைமுகமாக குறிப்பிட்டு] முதலமைச்சரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு காரியங்கள்  நடப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்” என்று தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கையில் வெளியாகியுள்ள கருத்து சித்திரத்துடன் கூடிய கட்டுரையில், “சமீப காலமாக கருணாநிதிக்கு சந்தேகப் பைத்தியம் பிடித்தாட்டுகிறது. இப்படியே போனா "நான் கருணாநிதி தானா?" என்று அவர் அவரையே சந்தேகித்துக்கொள்கிற நிலைமையும் ஏற்படலாம்!
 
இவ்வாறிருக்க, மக்களிடம் வெகு காலமாக அலசப்படுகிற ஐயம் யாதெனில், அது -
திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆண்டிமுத்து ராசா ‘திகாரில்' ஒரு அறை பெற்றார் என்றால், திமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திருச்சி சிவாவோ தில்லி ஏர்போர்ட்டில் திருவாளர் கருணா தற்போது மேற்கோள் காட்டுகிற அந்த உத்தம அம்மையிடம் ஓங்கி நாலு ‘அறை' பெற்றார்.
 
ஆனாலும், இப்படி அறை வாங்கி அசிங்கப்பட்டுக் கிடப்பவர்களிடமிருந்து குறைந்தபட்சம் அந்த கொள்கை (?) பரப்பும் செயலாளர் பதவியைக்கூட பிடுங்குவதற்கு திராணியற்றுக் கிடக்கிறது தி.மு.க.வும், அதன் தலைமையும் என்றால் அதன் பின்னணி சமாச்சாரம் என்னவோ? என்பதுதான் அந்த ஐயம்!
 
மு.க. முதலில் இந்த சந்தேகத்தை முன்வந்து தீர்க்க வேண்டும். ஏனெனில், அவர் கட்சி கொள்கை பரப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவரை பொது இடத்தில் வைத்து செவிலிலேயே அறை விட்ட பெண்ணின் செயலை கண்டிப்பதற்கு பதிலாக, அந்த சேலைக்குப் பின்னாலேயே இவரும் போய் நின்று கொண்டு மேற்கோள் காட்டுவதும், வியாக்யானம் பேசுவதும் வெட்கக்கேடு அல்லவா! இதுதான் ஒரு தலைவனுக்கான லட்சணமா? என்று நாடு கேட்கிறது!” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்பல்லோவில் கருணாநிதி துணைவியாருடன் சந்திப்பு: கணக்கு போட்ட சசிகலா