Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நகை கடை உரிமையாளரை கொலை செய்து கொள்ளையடித்த வாலிபருக்கு தூக்கு தண்டனை

நகை கடை உரிமையாளரை கொலை செய்து கொள்ளையடித்த வாலிபருக்கு தூக்கு தண்டனை
, வியாழன், 22 ஜனவரி 2015 (09:29 IST)
நகை கடை உரிமையாளரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் 65 வயதுடைய பூராராம். இவருடைய மகன்கள் 30 வயதுடைய கானாராம் மற்றும்  28 வயதுடைய குணாராம் என்ற கணேஷ். இவர்கள் பல ஆண்டுகளாக மதுரவாயலை  அடுத்துள்ள நெற்குன்றம் சக்தி நகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.
 
இவர்கள் அதே பகுதியில் உள்ள பட்டேல் சாலையில் இவர்கள் சொந்தமாக நகைக்கடை மற்றும் நகை அடகு கடை நடத்தி வருகின்றனர். கடந்த 14. 4. 2012 அன்று கடையில் கணேஷ் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
 
அண்ணன் கானாராம் வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அன்று பிற்பகலில் கல்லூரி மாணவர் போல் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், நகைகள் வாங்க வேண்டும். புதிய மாடல்களை காட்டுங்கள் என்று கூறியுள்ளார். 
 
கணேஷ், வந்தவரிடம் கடையில் இருந்த புதியரக தங்க நகைகளின் மாடல்களை எடுத்து காட்டினார். ஆனால் அந்த வாலிபர், இந்த மாடல்கள் பிடிக்கவில்லை என்றும் வேறு மாடல் இருந்தால் காட்டுமாறும் கேட்டுள்ளார்.
 
எனவே, கணேஷ், வேறு மாடல் நகைகளை எடுத்து வர கடையில் உள்ள லாக்கர் அறைக்குள் சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற அந்த வாலிபர், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து...

கணேஷின் கழுத்தை அறுத்தும். வயிற்றில் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். 
 
இதைத் தோடர்ந்து, அந்த வாலிபர், லாக்கரில் இருந்த 20 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றார். இந்த சம்பவங்கள் அனைத்தும் கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன. 
 
பின்னர் கடைக்கு வந்த கானாராம், கடையில் கணேஷ் இல்லாததால், அவரை தேடி பார்த்தபோது, லாக்கர் அறைக்குள் கணேஷ், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.  
 
இதுபற்றி தகவல் அறிந்தது அங்கு வந்த மதுரவாயல் காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட கணேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளியை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
 
இந்நிலையில், 12.5. 2012 அன்று பள்ளிக்கரனை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், வாலிபர் ஒருவர் தான் சென்னை மாநகராட்சி ஊழியர் என்றும் பன்றி காய்ச்சலுக்கு மருந்து கொடுத்து, கணக்கெடுக்கும் பணிக்காக வந்துள்ளதாகக் கூறி அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். 
 
அப்போது, அப்பகுதி பொது மக்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, நெல்லிக்கடை வீதியை சேர்ந்த 32 வயதுடைய ராமஜெயம் என்பதும், மதுரவாயலை அடுத்த நகைக்கடையில் புகுந்து உரிமையாளர் கணேஷை கொலை செய்து நகையை கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டவர் என்பதும் தெரிந்தது. 
 
ராமஜெயம், இலங்கையில் 6 மாதம் தங்கி ஏரோநாட்டிக்கல் என்ஜினீயர் படித்தவர் பின்னர் 6 மாதம் கனடாவில் தங்கி வேலை செய்து வந்தார். குறுகிய காலத்தில் பணக்காரனாக ஆக வேண்டும் என்ற ஆசையில் நகை கடை உரிமையாளர் கணேஷை கொலை செய்து கொள்ளையடித்ததாக கூறினார்.
 
ஆனால் நகைக்கடையில் கொள்ளையடித்த நகைகளில் பெரும்பாலும் கவரிங் நகைகள் என்பதால் மீண்டும் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டதாக, விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை காவல்துறையினர் கைப்பற்றினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். 
 
இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3 ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 30 சாட்சியங்கள், 22 ஆவணங்கள், 14 தடயங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, ராமஜெயம் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிரூபிக்கப்பட்டதால் கொலையாளி ராமஜெயத்திற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil