Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளால் ஆபத்து என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: தி.வேல்முருகன்

முல்லைப் பெரியாறு அணைக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளால் ஆபத்து என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது: தி.வேல்முருகன்
, சனி, 4 ஜூலை 2015 (01:02 IST)
முல்லைப் பெரியாறு அணைக்கு, விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளால் ஆபத்து என கூறியுள்ளது ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார். 
 

 
இது குறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
 
முல்லைப் பெரியாறு அணையில் நீண்ட காலமாக, கேரளா தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சட்டப் போராட்டங்கள் மூலமே தமிழக அரசு தனது உரிமையை நிலை நாட்டி வருகிறது.
 
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள செல்லும் தமிழக அதிகாரிகள் தாக்கப்படுவதும், தடுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையை நிறுத்துமாறு ஒட்டுமொத்த தமிழகமே மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
ஆனால் தமிழகத்தின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசோ, உச்ச நீதிமன்றத்தில், முல்லை பெரியாறு அணையில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரை பணியமர்த்த தேவையில்லை என கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த கருத்து வேதனை தருகிறது.
 
தமிழகத்தின் வாழ்வுரிமை பிரச்சனைகளில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. அதனையேதான் தற்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் தற்போது வெளிப்படுத்தியுள்ளது.
 
தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு மாநிலம், இந்தியாவின் ஒரு அங்கம் என்பதை மதித்து தமிழ்நாட்டின் கோரிக்கையான முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை நிறுத்த வேண்டும்.
 
அதே வேளையில், உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்காக, மத்திய தொழில் பாதுகாப்பு படையைக் நியமிக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளால் ஆபத்து என கூறியுள்ளது ஏற்புடையது அல்ல. 
 
முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு என தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைகளுக்காக வாழ்வுரிமைகளுக்காக போராடுகிறவர்கள். போராடுகிற இயக்கங்கள் பெரும்பாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சுதந்திரப் போராட்டத்தை ஆதரிக்கும் இயக்கங்களே என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
 
எனவே, முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க போராடும் உரிமைப் போராட்டத்தில், தமிழக அரசுக்கு உறுதுணையாக உள்ளவர்களால் "அணைக்கு ஆபத்து" என்று கூறுவதை ஏற்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil