Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரள அரசின் வஞ்சகத் திட்டத்துக்கு மத்திய அரசு துணை போகிறது: வைகோ குற்றச்சாட்டு

கேரள அரசின் வஞ்சகத் திட்டத்துக்கு மத்திய அரசு துணை போகிறது: வைகோ குற்றச்சாட்டு
, வெள்ளி, 3 ஜூலை 2015 (12:18 IST)
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் வஞ்சகத் திட்டத்துக்கு மத்திய அரசு துணை போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.
 
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை கேரள அரசு மேற்கொள்ள, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் கடந்த ஜூன் 5 ஆம் தேதி அனுமதி வழங்கி இருக்கிறது.
 
புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுப் பணிகளை கேரள அரசு நடத்தவும் வஞ்சகமான முறையில் மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மே மாதம் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிதாக அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.
 
இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், “முல்லைப் பெரியாறு அணை பகுதியின் பாதுகாப்புக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை நியமிக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
 
“மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினரை பணியமர்த்தத் தேவையில்லை எனவும், கேரள அரசு கோரினால் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை பணியில் ஈடுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
 
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு 1970 ஆம் ஆண்டு வரையில் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. பின்னர் கேரள மாநில அரசு பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
 
2006 ஆம் ஆண்டு நவம்பரில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து மத்திய அரசின் உளவுத்துறை (ஐ.பி.,) முல்லைப் பெரியாறு அணை மற்றும் நீர்மின் திட்ட பாதுகாப்பு தொடர்பான பதினோறு பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கை ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தது. 
 
அதில் எட்டாவது பரிந்துரையில், “கேரள காவல்துறை, முல்லைப் பெரியாறில் இருந்து அகற்றப்பட்டு, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற மத்திய காவல்துறை அல்லது தொழிலகப் பாதுகாப்புப் படையை அங்கு நிறுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தது.
 
கேரள அரசு கோரினால் மத்திய காவல்படை நிறுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தற்போது கூறியிருப்பது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய காவல்படை வேண்டும் என்று கேரள அரசு ஒருபோதும் கேட்கப்போவது இல்லை.
 
தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு முல்லைப் பெரியாறு அணையைத் தகர்க்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். கேரள அரசின் இந்த வஞ்சகத் திட்டத்துக்கு துணை போகும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிப்பதுடன், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையை உடனடியாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil