Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை வழக்கை விரைவுபடுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்

ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை வழக்கை விரைவுபடுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்
, வியாழன், 21 மே 2015 (18:03 IST)
ஆந்திராவில் திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியிறுத்தியுள்ளார்.
 
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது,
 
"ஆந்திரப் பிரதேசத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 மரம் வெட்டும் தொழிலாளிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு நாளுக்கு நாள் குழப்பமடைந்துகொண்டே செல்கிறது. முந்தைய நாள் இரவில் இந்த மரம் வெட்டும் தொழிலாளிகள் சேஷாச்சலம் காட்டில் செம்மரங்களை வெட்டி கட்டைகளை கடத்திச் சென்றதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், கொலை செய்யப்பட்டவர்கள் சிலரின் தொலைப்பேசி உரையாடல் பதிவுகள் இந்த தகவலுக்கு முரணாக உள்ளன.
 
இவர்களில் இரண்டு பேர் அன்றைய தின இரவில் பெரும்பாலான நேரங்கள் பயணம் செய்து, கொலை செய்யப்பட்ட இடத்துக்கு, கொலை செய்யப்படுவதற்கு 3 மணி நேரம் முன்புதான் வந்திருக்கிறார்கள். அதேநேரம், மூன்றாவது நபர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தமிழ்நாடு-ஆந்திர எல்லையை, முந்தைய தினம் மாலை 5.30 மணிக்கே அடைந்திருக்கிறார். இம்மூன்று பேரும் முந்தைய தினம் வனத்துறை அதிகாரிகள் மற்றும், அதிரடிப்படையினரால் அழைத்துச்செல்லப்பட்டதாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் 3 பேரின் சாட்சி கூறியுள்ளனர்.
 
இந்த சாட்சியங்கள் கொலைசெய்யப்பட்ட 3 பேரின் தொலைப்பேசி உரையாடல் பதிவுகளை உறுதி செய்கின்றன. படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களில் காணப்படும் கொடும் சித்ரவதை காயங்கள், தற்காப்புக்காக சுட்டோம் என்ற ஆந்திர காவல்துறையினரின் வாதத்துக்கு முரண்பாடாக இருக்கிறது. எனவே, தமிழக அரசு தம்மைத் தாமே இந்த வழக்கில் ஈடுபடுத்திக்கொண்டு, வழக்கை துரிதப்படுத்தி, உரிய நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil