Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாசனத்திற்காக மேட்டூர் அணை ஆகஸ்ட் 9 ஆம் தேதி திறப்பு: ஜெயலலிதா உத்தரவு

பாசனத்திற்காக மேட்டூர் அணை  ஆகஸ்ட் 9 ஆம் தேதி திறப்பு: ஜெயலலிதா உத்தரவு
, வெள்ளி, 31 ஜூலை 2015 (12:54 IST)
காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆகஸ்ட் 9 ஆம் தேதி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
காவிரி டெல்டா பாசனத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும், மேட்டூர் அணையில் குறைந்தபட்சம் தண்ணீர் 90 அடியாக இருக்கும் போது, குறுவை நெல் சாகுபடிக்காக  ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.
 
தென்மேற்கு பருவ மழை கடந்த ஜூன் மாதத்தில் கர்நாடகா–கேரளா நீர் பிடிப்பு பகுதிகளில் துவங்கி பின்னர் குறைவடைந்தது. அதனால், இந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி அன்று மேட்டூர் அணையில் 74.21 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது.
 
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்ததால், அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நடப்பாண்டு ஜூன் 12 ஆம் தேதியன்று தண்ணீர் திறந்து விட இயலவில்லை.
 
கடந்த மூன்றாண்டுகளாக வழங்கியது போல், இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கவும், திருந்திய நெல் சாகுபடி முறையைப் பின்பற்றி அதிக மகசூல் பெறும் வகையில், நடவு இயந்திரம் மூலம் நெல் நடவுப் பணிகளை மேற்கொள்ளுதல், தேவைக்கேற்ப ஜிப்சம் பயன்படுத்துதல், நெல் நுண்ணூட்டக் கலவை, உயிர் உரங்கள் பயன்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவித்தல் போன்ற திட்டங்களுக்காக  40 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலான குறுவை தொகுப்பு உதவித் திட்டத்தினை நான் அறிவித்து அது செயல்படுத்தப்பட்டுள்ளது.
 
ஜூலை மாதத்தில் ஓரளவிற்கு தென்மேற்குப் பருவ மழை காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்ததினால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து,  இன்றைய (31.7.2015)  நிலவரப் படி அணையில்  95.91 அடி தண்ணீர் உள்ளது.
 
காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் தென்மேற்கு பருவ மழை ஆகஸ்ட் மாதத்தில் இயல்பானதாக இருக்கும் என்பதை கருதியும், கர்நாடக நீர்தேக்கங்களிலிருந்து காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீர் கிடைக்கப் பெறும் என்பதை எதிர்நோக்கியும், தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பை கருத்திற்கொண்டும், இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை இயல்பானதாக இருக்கும் என்பதை எதிர்நோக்கியும்,  சுமார் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக, 9.8.2015 முதல் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
 
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 
இன்று பாசனத்திற்காக பவானிசாகர் அணை திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், மேட்டூரிலிருந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி திறந்துவிடப்படும் என்னும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil