Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா

மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா
, திங்கள், 29 ஜூன் 2015 (12:27 IST)
ஆலந்தூர்-கோயம்பேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவையை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.


 

 
ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 2 ஆவது வழித்தடமான சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 
இதில் சுரங்கப்பாதையில் 16 ரயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் 16 ரயில் நிலையங்கள் என 32 ரயில் நிலையங்கள் அமைக் கப்பட்டு வருகின்றன.
 
முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் ஆய்வு செய்து, பயணிகள் சேவையை தொடங்குவதற்கான சான்றிதழை வழங்கினார்.
 
இதைத் தொடர்ந்து, ஆலந்தூர்-கோயம்பேடு இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர்  ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் மெட்ரோ ரயில் சேவையை மதியம் 12 மணியளவில் தொடங்கி வைத்தார்.
 
ஆலந்தூரில் இருந்து தினமும் முதல் ரயில் காலை 6.03 மணிக்கு புறப்படும். கடைசி மெட்ரோ ரயில் இரவு 10.03 மணிக்கு புறப்படும். கோயம்பேட்டில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு முதல் ரயில் புறப்படும். கடைசி ரெயில் 9.40 மணிக்கு புறப்படும்.
 
10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுகிறது. தினமும் கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு 95 ரயில்களும், ஆலந்தூரில் இருந்து கோயம்பேடுக்கு 97 ரயில்களும் என மொத்தம் 192 முறை ரயில்கள் ஆலந்தூர் – கோயம்பேட்டிற்கு இயக்கப்படுகின்றன.
 
ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரையிலான 10 கி.மீ. தூரத்தை 19 நிமிடங்களில் மெட்ரோ ரயில் சென்று அடையும். அதிகபட்ச வேகம் 72 கி.மீ. ஆகும். ஆனால் தற்போது 35 கி.மீ வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில் 35 வினாடிகள் நின்று செல்லும்.
 
மெட்ரோ ரயில் நிலையங்கள் பிரமாண்டமான முறையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 2 ஏ.டி.எம். எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகள், தடையற்ற மின்சார வசதி, குறைந்த பயண நேரம் போன்ற வசதிகளை மெட்ரோ ரெயில் கொண்டு உள்ளது. அனைத்து ரயில் நிலையங்களுமே 2 ஆவது மாடியில்தான் அமைந்துள்ளன.
 
இந்நிலையில், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் எளிதாக ரயிலில் ஏறுவதற்காக தரைதளத்தில் இருந்து லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு லிப்டில் 13 நபர்கள் செல்லலாம்.
 
மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலிகளை நிறுத்தும் வசதியும், பார்வையற்றவர்கள் லிப்டை எளிதாக இயக்கும் வண்ணம் பிரெய்லி பொத்தான்களும், தானியங்கி மீட்பு சாதன வசதிகளும் அமைக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil