Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீனாகுமாரி அறிக்கையை நிராகரித்தது மத்திய அரசு: கருணாநிதி வரவேற்பு

மீனாகுமாரி அறிக்கையை நிராகரித்தது மத்திய அரசு: கருணாநிதி வரவேற்பு
, புதன், 13 மே 2015 (14:26 IST)
மீனவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கிடும் வகையில் அமைந்திருக்கும் மீனாகுமாரி அறிக்கையை, மத்திய அரசு நிராகரித்திருப்பதாக் கூறி திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
13–5–2015 தேதிய நாளேடுகளில் சில முக்கிய செய்திகள் வந்துள்ளன. முதலாவதாக டாக்டர் மீனாகுமாரி அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக ஒரு செய்தி வந்துள்ளது. மீனாகுமாரி பரிந்துரைகள் பற்றி கடந்த 11–4–2015 அன்றே நான் வெளியிட்ட அறிக்கையில், "டாக்டர் மீனாகுமாரி தலைமையில் 7 வல்லுநர்கள் அடங்கிய ஆணையம் ஒன்று மத்திய அரசினால் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் தன்னுடைய பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மத்திய அரசிடம் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சமர்ப்பித்தது.
 
அந்த அறிக்கையையும் ஆணையத்தின் பரிந்துரைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டதாக செய்திகள் வந்துள்ளதைத் தொடர்ந்து, அந்தப் பரிந்துரைகள் அனைத்தும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக் குறியாக்கிடும் வகையில் அமைந்திருப்பதால் அதனை எதிர்த்து தமிழக மீனவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 
இந்தப் பரிந்துரைகள், இந்திய நாட்டு மீனவர்களின் வாழ்க்கைக்கு உதவிட வழி வகுக்காமல், வெளிநாட்டு மீன்பீடி நிறுவனங்களுக்கு இந்தியக் கடல் செல்வம் அனைத்தையும் தடையின்றித் தாரை வார்த்திடும் வகையிலே அமைந்துள்ளன என்று சொல்லப்படுகிறது.
 
எனவே மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற மீனாகுமாரி கமிஷன் அறிக்கையையும் ரத்து செய்ய வேண்டுமென்று திமுக சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தேன். வேறு சில கட்சிகளின் தலைவர்களும் இதே போன்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
 
இந்த வேண்டுகோள்களை ஏற்று, மத்திய அமைச்சர்கள் மற்றும் கடற்பகுதியைச் சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய மத்திய அரசு, மீனாகுமாரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களையும், யோசனைகளையும் முற்றாக நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த ஆக்கப் பூர்வமான முடிவினைத் திமுக வரவேற்கிறது.
 
அதுபோலவே, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை நமது ராமேஸ்வரம் மீனவர்கள் நேரில் சந்தித்து வேண்டிக் கொண்டதன் பேரில் இலங்கைச் சிறையில் அடைபட்டிருக்கும் 37 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்ற செய்தியும் – நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நிலம் கையகப்படுத்தும் மசோதாவினை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியும் நாம் வரவேற்கின்ற செய்திகளாகும்.
 
இலங்கை அதிபர் நமது மீனவர்களிடம் பேசும்போது, "இலங்கை வடக்கு மாகாண மீனவர்களிடம் பேசி அதன் பின் தமிழக மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீன் பிடிப்பதற்கான திட்டம் வகுக்கப்படும். இது நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் விரைவில் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும்" என்றெல்லாம் தெரிவித்திருப்பது நமது மீனவர்களுக்குப் பெரிதும் ஆறுதல் அளிக்கின்ற செய்தியாகும்.
 
இலங்கை அதிபரின் இந்த நல்ல அறிவிப்பினைத் தொடர்ந்து மத்திய அரசு குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாட்டு மீனவர்களின் கலந்தாலோசனைக்கு விரைவில் ஏற்பாடு செய்து நமது மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குச் சுமூகமானதொரு முடிவு மேற்கொள்ளத் துணை புரிந்திட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil