Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர் உயிரிழப்பு:மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணியை அரசு உறுதி செய்ய வேண்டும்! - ராமதாஸ்

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2024 (15:43 IST)
தொடர்ந்து 48 மணி நேரம் பணி செய்ததால் முதுநிலை மருத்துவ மாணவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகும் நிலையில், 'மனித உரிமைகளை மதித்து மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணியை அரசு உறுதி செய்ய வேண்டும்' என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் பயின்று வந்த தமிழழகன் என்ற மருத்துவர், மருத்துவர்களுக்கான பணி அறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர் தமிழழகனின் மறைவுக்கு கூறப்படும் காரணங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. மருத்துவர் தமிழழகன் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஓய்வின்றி இரவு பகலாக பணி செய்ததால் சனிக்கிழமை மாலை அவருக்கு தலைவலி ஏற்பட்டிருக்கிறது. அதனால், ஓய்வு எடுப்பதற்காக முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான பணி அறைக்கு சென்று அமர்ந்த தமிழழகன் அடுத்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது. 26 வயதே ஆன மருத்துவர் தமிழழகனுக்கு இயல்பாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், ஓய்வின்றி தொடர்ச்சியாக பணி செய்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அவருடன் பணியாற்றும் சக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பணிச்சுமையால் மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த திசம்பர் மாதத்தில் பணிச்சுமையால் உயிரிழந்த மூன்றாவது மருத்துவர் தமிழழகன் ஆவார். அதற்கு முன் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவம் பயின்று வந்த மருத்துவ மாணவர் மருதுபாண்டியன் 48 மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்ததால் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து சென்னை அயனாவரம் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் படித்து வந்த மருத்துவர் சோலைசாமி 24 மணி நேரத்திற்கும் கூடுதலாக தொடர்ந்து பணி செய்ய வைக்கப்பட்டதால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உயிரிழந்தார். உயிர் காக்க வேண்டிய மருத்துவர்களே ஓய்வின்றி பணி செய்வதால் உயிரிழக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

மக்களின் உயிர்காக்கும் கடவுள்கள் என்று போற்றப்படும் மருத்துவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதற்கு மாறாக முதுநிலை மருத்துவ மாணவர்களை தொடர்ந்து பல நாட்கள் பணி செய்ய வைத்து அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மனித உரிமைகளை மதிக்காத, மனிதநேயமற்ற செயலாகும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களை நியமிக்காதது தான் இத்தகைய சிக்கல்களுக்கு காரணம் ஆகும். முதுநிலை மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை ஓய்வின்றி பணி செய்ய வைப்பதை மன்னிக்கவே முடியாது. சாதாரண தொழிலாளர்களாக இருந்தாலும் கூட அவர்களை 8 மணி நேரத்திற்கும் கூடுதலாக வேலை வாங்கக்கூடாது என்பது தான் சட்டமாகும்.

மருத்துவர்கள் பணி என்பது மருத்துவம் அளிப்பதைக் கடந்து நோயாளிகளிடம் அன்பையும், கருணையையும் காட்ட வேண்டிய பணியாகும். மருத்துவர்களையே மன அழுத்தத்திற்கு ஆளாக்கினால் அவர்களால் மற்றவர்களின் உயிர்களை எவ்வாறு காப்பாற்ற முடியும்? எனவே, முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி பணி முறையை கட்டாயமாக்க வேண்டும். அதற்கு வசதியாக அனைத்து நிலை அரசு மருத்துவமனைகளிலும் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்''என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் வீட்டில் பாலியல் தொழில்; சென்னையில் சிக்கிய கும்பல்!

கடலில் மூழ்கிய மீனவர்களின் படகு.. மீட்க சென்ற படகும் மூழ்கியதால் பரபரப்பு..!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண்.. சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்..!

ராமதாஸை அடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கும் வேலையில்லை.. அமைச்சர் சேகர்பாபு..!

டெல்லி பிவிஆர் தியேட்டர் அருகில் திடீரென வெடித்த மர்ம பொருள்.. தீவிரவாதிகள் சதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments