Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவ நுழைவுத் தேர்வு சீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

மருத்துவ நுழைவுத் தேர்வு சீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
, வியாழன், 10 மார்ச் 2016 (07:37 IST)
மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.


 


 
இது குறித்து நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
 
மருத்துவப் படிப்புகளில் தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரும் மனுவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி கடந்த மாதம் 9 ஆம் தேதியன்று தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.
 
இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில், பல் மருத்துவத்தின் இளநிலை - பட்ட மேற்படிப்புகளுக்கு தேசிய தகுதி நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
 
இதற்கு எதிரான வழக்கில், தமிழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து தகுதியான வாதங்களையும் ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி வழங்கியது/
 
இந்தத் தீர்ப்பு பரவலாக அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்யும் மனுவை தாக்கல் செய்தது.
 
இது தொடர்பாக, கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதியன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும், சீராய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன்.
 
இந்த சீராய்வு மனு தாக்கலுக்கு எதிராக, தமிழக அரசின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. எங்களது கடுமையான, தொடர் அதிருப்திகளைத் தெரிவித்த பிறகும், இப்போதைய மத்திய அரசால் சீராய்வு மனு திரும்பப் பெறப்படவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.
 
மேலும், இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையை ஏற்று, மத்திய சுகாதாரம் - குடும்ப நலத் துறை அமைச்சகம் வரைவு அமைச்சரவைக் குறிப்பை இதர அமைச்சகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. 
 
அதில், மருத்துவ கல்வி நிறுவனங்களில் தேசிய தகுதி நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தும் வகையில் அதற்கான மருத்துவ கவுன்சில் சட்டம் 1956 - இல் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக அறிய முடிகிறது.
 
மாநிலப் பிரிவிலுள்ள மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது மாநிலத்தின் உரிமைகளில் நேரடியாகத் தலையிடுவதாகும்.
 
மாநில அரசின் சேர்க்கைக் கொள்கையால் பயன்பெற்று வரும் மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகும். நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகளில் பதிவு செய்வது, பயிற்சி - படிப்புக்கான புத்தகங்கள் கிடைப்பது போன்றவை நகர்ப்புற மாணவர்களுக்கு எளிதாக இருக்கும்.
 
ஆனால், கிராமப்புற மாணவர்களுக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். பொது நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ததால் சமூக - பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நன்கு படிக்கக் கூடிய கிராமப்புற மாணவர்கள் பயனை அடைந்தனர்.
 
பட்ட மேற்படிப்புகளை முடிக்கும் மாணவர்களிடம் குறிப்பிட்ட காலத்துக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டுமென ஒப்பந்தம் போடப்படுகிறது.
 
இது, அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. தமிழகத்தில் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு அல்லது வேறு வகையான பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தினால், தமிழக அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வரும் கொள்கை நடைமுறைகள், சமூக-பொருளாதார கருத்தாக்கங்கள் அனைத்தும் பயனற்றுப் போகும்.
 
எனவே, மருத்துவப் படிப்புகளில் பொது நுழைவுத் தேர்வு என்ற விஷயத்தில் தமிழகம் தனது கடுமையான அதிருப்திகளை பதிவு செய்கிறது. இதனை தங்களின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு வருகிறோம்.
 
இந்தத் தருணத்தில், கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவைத் திரும்பப் பெற மத்திய சுகாதாரம் - குடும்ப நலத் துறைக்கு தாங்கள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
 
இந்தச் சீராய்வு மனு மீதான விசாரணை வரும் 15 ஆம் தேதி வர உள்ளது. மேலும், இந்தப் பிரச்னையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு உச்ச நீதிமன்றம், கடந்த 2013 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுகளை தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு இந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil