Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மியான்மரில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்: வைகோ

மியான்மரில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்: வைகோ
, திங்கள், 22 ஜூன் 2015 (20:11 IST)
மியான்மர் நாட்டில் தமிழர்களுக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 

 
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மியான்மர் நாட்டில் நூற்றாண்டுக் காலமாக வாழ்ந்து வரும் தமிழர்கள் அந்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்படுவதாக வரும் தகவல்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது.
 
ஆங்கிலேயர் ஆட்சியின்போது, இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஏராளமாக பர்மாவுக்குச் சென்று குடியேறினார்கள். வர்த்தகம் மற்றும் வட்டித் தொழிலில் ஈடுபட்டவர்கள், கூலித் தொழிலாளர்கள் என பெருமளவில் தமிழர்கள் வாழ்ந்து வந்தனர்.
 
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பர்மாவில் எழுந்த சூழல்கள் தமிழர்களுக்கு எதிராக அமைந்ததால், அவர்கள் பர்மாவில் இருந்து வெளியேறி தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
 
ஆனாலும் தற்போது ஐந்தரைக் கோடி மக்கள் தொகை கொண்ட பர்மாவில் 15 இலட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களுள் பெரும்பாலோனோர், நூறு ஆண்டுகள் கடந்து அங்கு வாழ்ந்து வந்தாலும் அந்நாட்டுக் குடி உரிமை வழங்கப்படவில்லை.
 
பர்மாவில் தற்போது நடைபெற்று வரும் ராணுவ ஆட்சியில் தமிழர்கள் மொழி, பண்பாட்டு உரிமைகள் பறிக்கப்பட்டன. தேவாலயங்களில் தமிழ்மொழி கற்பிக்கப்படுவதற்கும், ராணுவ ஆட்சியாளர்கள் கெடுபிடி செய்கின்றனர்.
 
தமிழ் மொழி பள்ளிகள் நடத்தவும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும் இந்திய அரசும், தமிழக அரசும் உதவிட வேண்டும் என்று நீண்ட காலமாகத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் மியான்மரில் வாழ்ந்து வரும் தமிழர்கள் தற்போது அங்கிருந்து வெளியேற்றப்படும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 
மியான்மரின் தட்டோன், பஹமோ மாவட்டங்களில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழர்கள், அங்கு ஏற்பட்டுள்ள கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
மியான்மரில் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடைபெற்று வருவதால், பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மியான்மரை விட்டு வெளியேறி மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் செல்கின்றனர்.
 
ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் போன்று தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதால், தமிழர்களும் மியான்மரில் இருந்து வெளியேறி, படகுகளில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு சட்டவிரோதமாக மலேசியா, இந்தோனேசியா நாடுகளுக்கு செல்லும் நிலை உருவாகி இருக்கிறது.
 
மலேசியாவுக்கு அடைக்கலம் தேடிப்போன மியான்மர் தமிழர்கள், மலேசியா எல்லையில் தடுப்புக் காவல் முகாம்களில் அடைக்கப்பட்டுச் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
 
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் வாழ்ந்து வரும் தமிழர்கள் நாடு அற்றவர்களாக ஆக்கப்பட்டு, அகதிகளாக அலையும் கொடுமை நெஞ்சைப் பிளக்கிறது.
 
‘தமிழன் என்றால் அகதி’ என்று அகராதியில் பொருள் கூறும் நிலைமை ஏற்பட்டு வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.
 
எனவே, இந்திய அரசு உடனடியாக தலையிட்டு, தமிழர்கள் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவும், தமிழர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் உரிமை வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil