Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாவோயிஸ்டுகளை ஒடுக்க சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது: ஜெயலலிதா

மாவோயிஸ்டுகளை ஒடுக்க சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது: ஜெயலலிதா
, ஞாயிறு, 13 டிசம்பர் 2015 (07:51 IST)
மாவோயிஸ்டுகளை ஒடுக்க சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது என்று தென் மண்டல மாநாட்டில் படிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உரையில் கூறப்பட்டுள்ளது.


 

 
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தென் மண்டல மாநிலங்களின் 26ஆவது கவுன்சில் கூட்டம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உரையை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்தார். 
 
அந்த உரையில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:–
 
தமிழ்நாட்டில் மீனவர்கள் பாதுகாப்புக்கு தமிழக அரசு 30 ஆயிரம் அவசர கால உதவி கோரும் கருவிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
 
இந்த கருவி மீனவர்களுக்கு படிப்படியாக இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.2 கோடி கொடுத்துள்ளது.
 
ஆனால் இந்த திட்டத்துக்கான 75 சதவீத மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 
தமிழ்நாட்டுக்கு மீன்வளத்துறைக்கு மத்திய அரசு இன்னும் ரூ.203 கோடி நிதி தர வேண்டியதுள்ளது. சின்னமுட்டம், குளச்சல், பூம்புகார், தேங்காய்ப்பட்டினம் பகுதிகளில் துறைமுக பணிகளை முடிக்க இந்த நிதியை மத்திய அரசு உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
 
தமிழ்நாட்டில் கடலோர பாதுகாப்புக்காக ஆண்டுக்கு 2 முறை ஆம்லா ஆபரேஷன் ஒத்திகை நடத்தப்படுகிறது. அது போல தமிழக மீனவர்கள் 39,401 பேருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
 
மத்திய அரசின் கடலோர மண்டல கட்டுப்பாடு திட்டங்கள் தமிழக மீனவர்களின் நலனை பாதிப்பதாக உள்ளது. எனவே அதில் இருந்து தமிழக மீனவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
 
தமிழக மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிப்பதை தமிழக அரசு உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு தேவையான ரூ.1,520 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
 
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநிலங்களும் சந்திக்கும் முச்சந்தி வனப் பகுதியில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் நடவடிக்கை 2013 ல் காணப்பட்டது.
 
தமிழக அரசு இது தொடர்பாக பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வனப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதனால் 5 மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர்.
 
மாவோயிஸ்டுகளை ஒடுக்க நீலகிரி மாவட்ட உள்ளூர் காவல்துறையினருக்கு நவீன கருவிகள் வழங்கப்பட வேண்டும்.
 
எனவே மத்திய உள்துறை அமைச்சகம், நீலகிரி மாவட்டத்தையும் பாதுகாப்பு தொடர்பான செலவின பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
 
மாவோயிஸ்டுகளை அடக்கும் விதமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.
 
மத்திய அரசு தயாரித்துள்ள சாலை போக்குவரத்து வரைவு மசோதாவானது மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. எனவே அந்த வரைவு மசோதாவை தமிழக அரசு ஏற்காது. அதை அமல்படுத்தும் முன்பு மாநில அரசுகளிடம் கருத்து கேட்க வேண்டும்.
 
கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தில் முதல் யுனிட் மூலம் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அங்கு மின் உற்பத்தி தொடங்கப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டுக்கு 563 மெகாவாட் மின்சாரம் தரப்பட்டது.
 
தற்போது 24.6.2015 முதல் பழுதுபார்ப்பு பணிக்காக கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் விரைவில் மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 
அது போல கூடங்குளத்தில் 2 ஆவது மின் உற்பத்தி பிரிவை விரைவில் தொடங்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு மேலும் 563 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
 
தமிழ்நாட்டில் டெங்கு, சிக்கன்குன்யா போன்றவற்றை கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகமும் மற்ற மாநில அரசுகளும் உடனுக்குடன் தகவல் கொடுக்க தகவல் தொடர்பை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த உரையில் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிடட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil