Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனையை அதிமுக அரசு இழுத்தடிப்பதாக மு.கருணாநிதி குற்றச்சாட்டு

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனையை அதிமுக அரசு இழுத்தடிப்பதாக மு.கருணாநிதி குற்றச்சாட்டு
, ஞாயிறு, 12 ஏப்ரல் 2015 (18:50 IST)
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனையை அதிமுக அரசு இழுத்தடிப்பதாகக் கூறியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, இப்பிரச்சனையில் விரைவில் சுமுகத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றார்.
 
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1,40,000 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கான 12-வது ஊதிய ஒப்பந்தம் 1.9.2013 முதலே நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்.
 
ஆனால் அதிமுக அரசு பேச்சுவார்த்தைக்குக் கூட அழைக்காமல் காலம் தாழ்த்தியதால் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, உட்பட 11 போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் டிசம்பர் மாதத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அதன் பிறகு தான் போக்குவரத்துத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவே முன் வந்தார்.
 
கூடுதல் நிதித் துறைச் செயலாளர், உமாநாத் ஐஏஎஸ், தலைமையில் 14 பேர் கொண்ட குழுவினையும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அரசு அமைத்தது. இந்தக் குழுவினரும், பேச்சு வார்த்தை நடத்தாமல், கோரிக்கை மனுக்களை மட்டும் வாங்கிக் கொண்டனர். அதன் பிறகு மீண்டும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பினைக் கொடுத்தன.
 
அதன் பிறகு, குரோம்பேட்டையில் பேச்சுவார்த்தை நடந்தது. 42 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிலே பங்கேற்றார்கள். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றாலும், முக்கிய பிரச்சனைகளில் உடன்பாடு வராததால், மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடருவதென்றும், வேலை நிறுத்தத்தை நடத்துவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டு, தொழிற்சங்கத்தினர் வெளியே வந்தார்கள்.
 
அப்போது கூட ஆளுங்கட்சியைச் சேர்ந்த அதிமுக தொழிற் சங்கத்தினரும், அவர்கள் அழைத்து வந்த குண்டர்களும் சேர்ந்து மற்ற தொழிற்சங்கத் தலைவர்கள் மீது கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டார்கள்.
 
நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகளிலும் சுமூக முடிவு காணப்படவில்லை. அரசு சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் எந்தக் கோரிக்கைகளையும் ஏற்க மறுத்தனர். அதனால் பிரச்சனை இழுபறியாகவே நீடித்தது. இந்தநிலையில் தான் 10.4.2015 அன்று ஐந்தாவது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 
அதிலே அந்தத் துறையின் அமைச்சரும் கலந்து கொண்ட போதிலும், அதிலும் முடியாமல், கோரிக்கையை ஏற்க தமிழக அரசிடம் நிதியில்லை என்று அமைச்சர் அரசின் மோசமான நிதி நிலைக்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்து, மீண்டும் 13 ஆம் தேதிக்கு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
அதிமுக அரசில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பிரச்சனை இவ்வாறு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதிலே எனக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. ஏனென்றால் கடந்த காலத்தில், 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா; முதல்வர் பொறுப்பேற்றிருந்த அந்தக் காலத்திலேயே போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சரி பாதியை தனியாருக்குத் தாரை வார்க்க ஆணை பிறப்பித்தவர் தான்! அப்போது நான் விடுத்த அறிக்கையில், "அதிமுக ஆட்சியில் பேருந்துகளைத் தனியாருக்குத் தாரை வார்த்தால், மீண்டும் கழக ஆட்சி அமையும்போது அனைத்துப் பேருந்துகளையும் அரசுடைமையாக்குவோம்" என்று அறிவித்த பிறகுதான், ஜெயலலிதா அரசு அந்தப் பிரச்சனையைக் கைவிட்டது.
 
அது மாத்திரமல்ல; தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 20 சதவிகித போனசை, 8.33 சதவிகிதமாக அதிமுக அரசு குறைத்தது. அதனை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்களில் 60 ஆயிரம் பேரை கைது செய்து சிறையிலே அடைத்தது.
 
5 ஆயிரம் தொழிலாளர்களை பணி நீக்கமே செய்தார்கள். தொழிலாளர்களில் பலருக்கு பதவி இறக்கம், பணி மாற்றம், ஊர் மாற்றம் என்றெல்லாம் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்த 17 நாட்களுக்கு வேலையில்லை, ஊதியம் இல்லை என்று அறிவித்தார்கள்.
 
2005 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை நடத்தித் தொழிற்சங்கங்கள் பேசிவிட்டு வெளியே வந்த பிறகு, தன்னிச்சையாக 7% ஊதிய உயர்வு என்று அறிவித்ததோடு, தொழிற்சங்கங்களோடு ஒவ்வொரு மூன்றாண்டுக்கும் ஒப்பந்தம் செய்வதற்கு மாறாக, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றினார்கள். இதன்காரணமாக 1.9.2001 முதல் 31.8.2003 வரை எந்தவித ஒப்பந்தப் ய்  வழங்கப்படவில்லை.
 
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை 20,000-இருந்து 16,000-ஆகக் குறைத்ததோடு, போக்குவரத்துத் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் 25,000 பேரைக் குறைத்தார்கள். போக்குவரத்துக் கழகங்கள் என்றாலே அதிமுக அரசுக்கு என்ன காரணத்தாலோ எழும் வெறுப்புணர்வு காரணமாக, பேருந்துகளையும், தொழிலாளர்களையும் குறைத்த காரணத்தால், போக்குவரத்துக் கழகங்களில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது.
 
போக்குவரத்துத் தொழிலாளர்களின் போனஸ், ஒப்பந்தம் பறிப்பு, சலுகை உரிமை பறிப்பு மூலம் ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் இருபதாயிரம் ரூபாய் வரை பறித்து பழி வாங்கிய ஆட்சிதான் அதிமுக ஆட்சி.
 
இவற்றையெல்லாம் கூறும்போது, திமு கழக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனை எவ்வாறெல்லாம் தீர்க்கப்பட்டது என்பதை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். 2006 இல் கழக ஆட்சி அமைந்த பிறகு குறைக்கப்பட்ட பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. 1.9.2003இல் செய்யப்பட்ட ஐந்தாண்டு ஒப்பந்தத்தை, ஓராண்டுக்கு முன்னதாக முடிவுக்குக் கொண்டு வந்து, 1.9.2007 முதல் புதிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தி 12 சதவிகித ஊதிய உயர்வுகள், குறைந்த பட்சம் ரூ.1000, அதிகப் பட்சமாக ரூ.2000 வழங்கப்பட்டது. ஒப்பந்தக் காலத்தை மீண்டும் 3 ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது.
 
கழக ஆட்சியில் போனஸ் ரூ.6,000 என்பது 8,400 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. வேலை நிறுத்தம் செய்த 17 நாட்களை, பணி நாட்களாகக் கருதி, ஊதியம் வழங்கிட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஓய்வூதியத்திற்கு கடைசி பத்து மாத ஊதியம் கணக்கிடுவது என்பதை மாற்றி, கடைசி மாத ஊதியத்தில் 50 சதவிகிதம் எனவும் கழக ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
 
ஓய்வூதியத்திற்கு தகுதி ஆண்டுகள் 30. அதிமுக ஆட்சியில் அதை 33 ஆண்டுகள் என்று உயர்த்தப்பட்டதை, கழக ஆட்சியில் மீண்டும் 30 ஆண்டுகளாக மாற்றினோம். பணியாளர் நியமனச் சட்டத்தை நீக்கி 49 ஆயிரம் புதிய பணியாளர்களை கழக ஆட்சியில் நியமித்தோம்.
 
2007ஆம் ஆண்டுக்குப் பிறகு, மூன்றாண்டுகள் கழிந்ததும், மீண்டும் 2010 ஆம் ஆண்டு ஓர் ஊதிய ஒப்பந்தத்தின் மூலம், ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை துவங்கப்பட்டது. அப்போது ஒப்பந்தம் செய்ததோடு மட்டுமல்லாமல், ஒப்பந்தத்திற்கான பலன்களை 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை வழங்குவதற்கான வகையில் முதல் கட்டமாக ரூ.512 கோடியும், கூடுதலாக ரூ.150 கோடியும் நிதி உதவி செய்து கழக ஆட்சியில் வழங்கப்பட்டது.
 
போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் கழக ஆட்சியில் எந்த அளவுக்கு தீர்க்கப்பட்டன என்பதையும், அதிமுக ஆட்சியில் எப்படியெல்லாம் இழுத்தடிக்கப்படுகின்றன என்பதையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகத் தான் சுருக்கமாக இங்கே எடுத்து வைத்துள்ளேன்.
 
இனியாவது இப்படிப்பட்ட நிலைமை நீடிக்காமல், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்த விவகாரத்தில் இதுவரை ஐந்து முறை பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப் பட்டு விட்டன என்பதையும், 2013ஆம் ஆண்டிலேயே முடிந்திருக்க வேண்டிய பிரச்சினை இரண்டாண்டு காலமாக நீடித்துக் கொண்டு போவதையும் மனதிலே கொண்டு, 13ஆம் தேதியன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலாவது போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு ஆக்கபூர்வமானதொரு முடிவினைக் காண வேண்டும்.
 
தமிழக அரசிடம் நிதியில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதிமுக அரசு எப்போது நிர்வாகப் பொறுப்புக்கு வந்ததோ, அப்போதே இந்த ஆட்சியில் அந்த நிலைமை தான் வரும் என்பது பொது மக்களுக்குத் தெரியாதா என்ன? எனவே அதையே சொல்லிக் கொண்டிராமல், பேச்சுவார்த்தையையும் நீடித்துக் கொண்டே போகாமல் தொழிலாளர்களின் மனம் குளிர்ந்தால் தான் போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக நடைபெறும் என்பதை மனதிலே கொண்டு தமிழக அரசு 13 ஆம் தேதிய பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவினை அறிவிக்க முன் வர வேண்டும் என்று மு.கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil