Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம்: குழப்பங்களைத் தீர்க்க சிறப்பு முகாம்

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம்: குழப்பங்களைத் தீர்க்க சிறப்பு முகாம்
, வியாழன், 11 டிசம்பர் 2014 (08:20 IST)
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் சேர நுகர்வோருக்கு உள்ள குழப்பங்களைத் தீர்க்கவும், படிவங்களை நிறைவு செய்து அளிக்கவும், டிசம்பர்-14-ல் சிறப்பு முகாமுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன தலைமை அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர்-14) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி.) சிறப்பு முகாமை நடத்துகிறது.
 
நேரடி மானியத் திட்டத்தில் பலன் பெற சமையல் எரிவாயு விநியோகஸ்தரையும் வங்கிக் கணக்கு எண்ணையும் இணைப்பது நுகர்வோர் சமையல் எரிவாயு எண்ணுடன் தொடர்புடைய 17 இலக்க குறியீட்டு எண் அடிப்படையான ஒன்றாகும்.
 
ஐ.ஓ.சி. நுகர்வோருக்கு ‘3‘ என்ற எண்ணுடன் தொடங்கும் இந்த 17 இலக்க எண் ஏற்கெனவே எஸ்எம்எஸ் மூலம் நுகர்வோரின் கைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
மேலும் www.indane.co.in என்ற இந்தியன் ஆயில் நிறுவன இணையதளம் மூலமும் இந்த 17 இலக்க குறியீட்டு எண்ணை நுகர்வோர் தெரிந்து கொள்ள முடியும்.
 
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் சேர ஆதார் அட்டை அவசியமில்லை. ஆதார் அட்டை இல்லாதவர்களும் நேரடி மானியம் பெறும் வகையில் இந்தத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
 
ஆதார் அட்டை இருந்தால் படிவம் 2 ஐ நிறைவு செய்து சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடமும், படிவம்- 1ஐ நிறைவு செய்து நுகர்வோர் தங்களது வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
 
ஆதார் அட்டை இல்லாதவர்கள் படிவம் 3 ஐ நிறைவு செய்து வங்கியிலும் படிவம் 4ஐ நிறைவு செய்து சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடமும் அளிக்க வேண்டும்.
 
சில சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களிடம் ஆலோசனையின்படி, ஆதார் அட்டை இல்லாதவர்கள் படிவம் 3 ஐ மட்டும் நிறைவு செய்து வங்கியில் அளித்தால் மட்டும் போதுமானது.
 
இந்தத் தகவல் தொடர்ந்து எஸ்எம்எஸ் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயு மானியம் தேவையில்லை எனக் கருதும் நுகர்வோர் படிவம் 5 ஐ நிறைவு செய்து அளிக்கலாம்.
 
நேரடி மானியத் திட்டத்தில் சேருவதற்கான படிவங்கள் குறித்து நுகர்வோருக்கு உள்ள சந்தேகங்களைப் போக்கவும் படிவத்தை உடனடியாக நிறைவு செய்து தரும் வகையிலும் இந்த சிறப்பு முகாமுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர்-14) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
சிறப்பு முகாமுக்கு வரும் நுகர்வோர் தங்களது சமையல் எரிவாயு புத்தகம், 17 இலக்க எண் (எஸ்எம்எஸ் தகவல்) ஆகியவற்றுடன் வந்தால் போதுமானது.
 
சிறப்பு முகாமிலேயே பூர்த்தி செய்த படிவம் பெறப்பட்டு, நேரடி மானியத் திட்டத்தில் சேர்ந்ததற்கான ஒப்புகைச் சீட்டு உடனடியாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
நேரடி மானியத் திட்டத்தில் சேர வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. எனவே இதுவரை திட்டத்தில் சேராதவர்கள் அவசரப்படத் தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil