Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொதுமக்கள் அவதிக்குள்ளாவார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை: விஜயகாந்த்

பொதுமக்கள் அவதிக்குள்ளாவார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை: விஜயகாந்த்
, திங்கள், 5 அக்டோபர் 2015 (16:24 IST)
சரக்கு லாரிகள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடிகளை முறைப்படுத்தக்கோரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
இதன் காரணமாக தமிழகத்தில் லாரிகள் ஓடாததால் மொத்தம் சுமார் 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன. அதோடு தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கும் லாரிகள் இயக்கபடாத காரணத்தினால் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற மக்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
 
லட்சக்கணக்கான தினசரி மற்றும் பாரந்தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இது போதா தென்று இன்று நடைபெற விருக்கும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றால் டேங்கர் லாரிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் லாரிகளும் நாளையிலிருந்து இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன.
 
இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 
நெடுஞ்சாலைதுறை ஒப்பந்த விதியின்படி ஒரு நெடுஞ்சாலைக்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்டு விட்டால், அந்த சாலையில் முழுமையான சுங்க வரி வசூலிப்பது நிறுத்தப்பட்டு, பராமரிப்புக்காக மட்டும் 30 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
 
பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பராமரிப்பு இன்றி இருக்கையிலே சுங்க கட்டண வசூல் மட்டும் கனஜோராக நடப்பதென்ன நியாயம். அதோடு ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சாலை அமைப்பதற்காக செலவழிக்கப்பட்ட தொகையும் அன்றாடம் வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணத்தையும் மக்களுக்கு தெரியபடுத்த வேண்டியது ஒப்பந்ததாரரின் கடமையாகும்.
 
ஆனால் இது நடைமுறை படுத்தப்படவில்லை. எனவே நாட்டிலுள்ள சுங்கச்சாவடிகள் அனைத்திலும் இந்த விவரங்களை தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு, இன்றைய நிலவரம் என்ன என்பதை இத்துறை சம்பந்தபட்ட மத்திய அமைச்சர் மக்களுக்கு தெரியபடுத்தவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
 
தமிழகத்தை பொறுத்தவரை இந்த வேலை நிறுத்தத்தினால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா உடனடியாக மத்திய அரசை வலியுறுத்தி சுமூக தீர்வுகாண நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
 
சரக்கு லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தாக்கம் பொதுமக்களை இன்னும் நேரடியாக சென்றடைய வில்லை என்றாலும், அடுத்த சில நாட்களில் கடுமையாக பாதிக்கக்கூடும். 
 
சுங்கச் சாவடிகள் பிரச்சினையை லாரி உரிமையாளர்களின் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் பொதுமக்களின் பிரச்சனையாகவும் கருதி லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை மட்டுமின்றி, மக்களின் உணர்வுகளையும் மதித்து லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil