இந்திய துணை ஜனாதிபதி பதவிக்காக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிடும் நிலையில் அவருக்கு அனைத்து கட்சி எம்.பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார் பாஜக தமிழக தலைவரும், எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரன்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “தமிழகத்திலுள்ள இண்டி கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்!
தமிழகத்தில் இருந்து பலமான தேசியக்குரல் அதிகாரமிக்கதாக இருக்க வேண்டுமென நினைத்து தற்போது துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழக மண்ணின் மைந்தரும், மகாராஷ்ட்டிர ஆளுநருமான அண்ணன் திரு. சி.பி ராதாகிருஷ்ணன் அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகியுள்ளது வரலாற்று சிறப்புமிக்க தருணம்.
ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளைத் தாண்டி எல்லோரும் ஆதரித்தோம் என்று வரலாற்றில் பேசப்பட்டால், அது ஒரு ஆரோக்கியமான அரசியலை ஊக்குவிக்கும்.
இதற்கு இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரவு தருவது சிறப்பானதாக இருக்கும்.
ஆகவே, கட்சி வித்தியாசங்களைத் தாண்டி, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் அண்ணன் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K