Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டுக்கு மேலும் 563 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

தமிழ்நாட்டுக்கு மேலும் 563 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
, புதன், 7 அக்டோபர் 2015 (13:15 IST)
கூடங்குளம் 2 ஆவது அணுஉலையை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் தமிழ்நாட்டுக்கு மேலும் 563 மெகாவாட் மின்சாரத்தை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு  முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.


 

 
அந்த கடிதத்தில் ஜெயலலிதா  கூறியிருப்பதாவது:-
 
கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது பிரிவில் மீண்டும் மின்சாரம் தயாரிக்க தாமதமாவது குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
 
கூடங்குளம் முதலாவது யூனிட்டில் தயாராகும் மொத்தம் 1000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழ்நாட்டுக்கு 563 மெகாவாட் மின்சாரம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
வணிக ரீதியிலான மின் உற்பத்தி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த 31.12.2014 அன்று தொடங்கியது. தற்போது பராமரிப்பு பணிக்காக கடந்த 90 நாட்களாக அந்த மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
 
இந்திய அணு சக்தி கழகம் இதுவரை கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது யூனிட்டில் மீண்டும் மின்சாரம் தயாரிப்பதற்கான அனுமதியைத் தரவில்லை.
 
காற்றாலை மூலம் மின்சாரம் கிடைத்து வரும் சீசன் முடிவடைய உள்ளதால், விரைவில் கூடங்குளம் முதலாவது யூனிட்டில் மின் உற்பத்தியைத் தொடங்க வேண்டியது அவசியமாகும்.
 
எனவே தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு இந்திய அணு சக்தி கழக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.
 
கூடங்குளம் முதலாவது யூனிட்டில் மின் உற்பத்தியை மீண்டும் தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது யூனிட்டின் அணு உலைப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.
 
இரண்டாவது யூனிட்டில் மின்சாரம் தயாரிக்க அணுசக்தி ஒழுங்கு முறை வாரியத்தின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
 
இரண்டாவது யூனிட்டில் மின்சார உற்பத்தி தொடங்கும் போது தமிழ்நாட்டுக்கு மேலும் 563 மெகாவாட் மின்சாரத்தை கொடுக்க, உரிய அதிகாரிகளுக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 
இந்த விஷயத்தில் விரைந்து பதில் அளிக்கவும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil