கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன், அவரது தந்தை இறப்பு குறித்து தவறான தகவல்கள் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமன், எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிவராமனின் தந்தை அசோக்குமாரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பலியானார். இருவரின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாணவி பாலியல் வழக்கில் கைதானசிவராமன், அவரது தந்தை அசோக்குமார் இறப்பு குறித்து ஏதேனும் தவறான செய்திகள் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.