Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்துல்கலாம் மறைவு: கருணாநிதி இரங்கல்

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2015 (12:03 IST)
அப்துல்கலாம் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-




 


இந்தியாவின்  முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா, மேதகு டாக்டர் ஏ.பி.ஜெ.  அப்துல் கலாம்  திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மறைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு,  அவருடன் எனக்கிருந்த தொடர்பு பற்றி அடுக்கடுக்கான எண்ணங்கள் எழுந்தன.

சென்னை - கலைவாணர் அரங்கில் 4-9-2006 அன்று ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் சார்பில் “தொல் காப்பியர் விருது”  எனக்கு வழங்கப்பட்ட  போது, அந்த விருதை  எனக்கு வழங்கியவரே  அப்துல் கலாம்தான்.   அப்போது அவர் ஆற்றிய உரையும், என்னைப் பாராட்டிக்கூறிய வார்த்தைகளும் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாதவை.   
ஏன் அதற்கு முன்பே நான் எழுதிய தொல்காப்பியப் பூங்கா நூலினை மேதகு அப்துல்கலாம் அவர்கள் படித்து விட்டு,  எனக்குப் பாராட்டுக் கடிதம் ஒன்றும் எழுதியிருந்தார்.  அது பற்றியும் கலைவாணர் அரங்கில் அவர் பேசும்போது குறிப்பிட்டார்.  

குடந்தையில் நடந்த ஒரு தீ விபத்தில் பள்ளிக் குழந்தைகள் பலர் மாண்டு மடிந்த போது நான் எழுதிய கவிதை ஒன்றையும் கண்களில் கண்ணீர் மல்கப் படித்ததாக எனக்கு எழுதியிருந்தார். அப்துல் கலாமைப் பற்றி நான்  13-6-2002 அன்று எழுதிய கவிதையின் ஒருசில வரிகளை இந்த நேரத்தில் நினை வூட்டுவது பொருத்தமாக இருக்கு மென்று கருதுகிறேன்.

மதநல்லிணக்கம்
கடமை தவறா மனிதர் என்று உச்சிக் கலசமாய் உயர்ந்து
மடமை நீங்கி மத நல்லிணக்கம் ஓங்க;
மனித நேயம் நெஞ்சத்தில் தாங்கி - நாட்டின்
மணி விளக்காய் ஒளிவிடப் போகிறார் இன்று!
அணு ஆயுதம் அழிவுக்குப் பயன்படாமல்
அமைதிகாக்கும் கேடய மாய் ஆவதற்கும்
ஆகாயத்தில் தாவுகின்ற ஏவுகணை
அண்டைநாட்டுத் தூதராக மாறுதற்கும்
மறு பிறப்பை விஞ்ஞானம் எடுப்பதற்கு
மனவலிவு புவி மாந்தர்க்கு மிகவும் வேண்டும்.
அவ்வலிவை உருவாக்க ஏற்றவரே
அறிவியலை ஆக்கப் பணிக்கென நோற்றவரே
அப்துல் கலாமென ஆரவாரம் புரிந்து
அவனியெங்கும் அன்பு முழக்கம் ஒலிக்கும்.

இத்தகைய உயர்வுக்கும் புகழுக்கும்  உரிய அப்துல் கலாம் அவர்களை  இந்தியத் திருநாடே இழந்து நிற்கும் இந்த வேளையில், அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரைப் பெரிதும் நேசிக்கும் இன்றைய இளைஞர்களுக்கும்  என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments