Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவதூறு வழக்குகள் மூலம் அதிகார துஷ்பிரயோகம் : கருணாநிதி கோபம்

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2016 (14:43 IST)
பல்வேறு அரசியல் தலைவர் மீது, அவதூறு வழக்குகள் போட்டு, தமிழக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
இந்திய உச்சநீதி மன்றம், நம்முடைய முதலமைச்சர் ஜெயலலிதாவை நோக்கிப் பல முறை பல கேள்விகள் கேட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது மேலும் ஒரு கேள்வி கேட்டுள்ளது!
 
“ஒரு அரசியல் எதிராளி மீது அவதூறு வழக்குகளைத் தொடுப்பதற்கு அரசாங்கத்தைத் தூண்டும் வகையில் அனுமதி வழங்க ஒரு முதலமைச்சர் தன்னுடைய அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்த முடியுமா?” இந்தக் கேள்விக்குத் தான் அடுத்த நான்கு வாரங்களுக்குள் தானே பதிலளிக்குமாறு தமிழக முதலமைச்சரை உச்ச நீதி மன்றம் கேட்டுள்ளது.
 
தர்மபுரியில் தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இதற்காக தர்மபுரி மாவட்ட நீதி மன்றத்தில் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி, விஜயகாந்த் சார்பில், அவருடைய வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, கடந்த ஆண்டு நவம்பரில், உச்ச நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதில் எந்த அவதூறும் இல்லை, ஏற்கனவே தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில், பல வழக்குகளில் அவதூறு தொடர் வதற்கான காரணங்களே இல்லை என்று நீதிபதிகள் கருத்துக் கூறியிருந்தனர். எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கோரப் பட்டிருந்தது.
 
இந்த வழக்கு தான் உச்ச நீதி மன்றத்தில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் 15-7-2016 அன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதிகள், அவதூறு வழக்கு தொடர்ந்ததற்கான பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறுமாறு கேட்டு, அவ்வாறே அந்தப் பேச்சு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தான், உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கூறும்போது, “இதில் என்ன இருக்கிறது, இது போன்ற பேச்சுக்கெல்லாம் அவதூறு வழக்கு தொடர்வதா? வழக்கு தொடர்வதற்கு முன், பேச்சில் அவதூறு உள்ளதா என்பதை ஆராய வேண்டாமா? அரசு வக்கீல்களை தமிழக அரசு “போஸ்ட் மேன்” போலப் பயன்படுத்துகிறதா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர். 
 
நீதிபதி மிஸ்ரா அவர்கள் மேலும் கூறும்போது, ஜனநாயகத்தில் ஒரு அரசியல் எதிரிக்கு, சாமான்ய மனிதர்களுக்கு இருப்பதைப் போல, நடைபெறும் ஆட்சியை விமர்மசனம் செய்வதற்கான உரிமை உண்டு என்றும் தெரிவித்திருக்கிறார். 

எதற்காக விஜயகாந்த் மீது அவதாறு வழக்கு தொடரப்பட்டது என்பது குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்றும், தமிழக அரசு மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் பதில் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பிட நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
 
அ.தி.மு.க. அரசில் போடப்படும் அவதூறு வழக்குகள் பற்றி 25-11-2015 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில், “கருத்துரிமைக்கு எதிரான இவர்களது அட்டகாசம் இப்படியே கட்டுப்படுத்தப்படாமல் தொடருமேயானால், உயர் நீதி மன்ற நீதிபதிகள், உச்ச நீதி மன்ற நீதிபதிகள் இந்த ஆட்சியைப் பற்றி வெளியிடும் தீர்ப்புகளுக்காகக் கூட, அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடுத்திடக் கூடும் என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தேன்.
 
இந்த ஆட்சியில் ஜெயலலிதா வுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாகக் கூறி, பாஜக வைச் சேர்ந்த சுப்பிர மணியம் சுவாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவருடைய துணைவியார், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின், முரசொலி ஆசிரியர் செல்வம், நக்கீரன் ஆசிரியர் கோபால் போன்றவர்கள் மீதும், பத்திரிகைகள் - பத்திரிகையாளர்கள் மீதும் மற்றும் பலர் மீதும் அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது 180 அவதூறு வழக்குகளை எதிர்க் கட்சியினர் மீது தொடுத்தார். தற்போது என் மீது 12 அவதூறு வழக்குகளும், விஜயகாந்த் மீது 34 அவதூறு வழக்குகளும், முரசொலி ஆசிரியர் செல்வம் மீது 17 வழக்குகளும், கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீது 5 அவதூறு வழக்குகளும் தொடரப் பட்டுள்ளன.
 
எதிர்க்கட்சிகள் எழுப்புகின்ற கேள்விகளுக்கு அவ்வப்போது உரிய பதில்களைச் சொல்லத் திராணியும், தைரியமும் இல்லாதவர்கள் தான் அவதூறு வழக்குகள் என்ற பெயரால் அரசு செலவில் எதிர்க் கட்சியினரை அச்சுறுத்திப் பழிவாங்குகின்ற வகையில் இப்படியெல்லாம் கொல்லைப்புற வழியில் நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்குத் தக்கப் பதிலடி கொடுத்து நல்ல பாடம் புகட்டும் வகையில் தான் தற்போது உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 
 
ஆனால் இப்படிப்பட்ட ஆக்க பூர்வமானதும் கூர்மையானதுமான கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, தன்னுடைய எண்ணத்தையும் வழியையும் திருத்திக் கொள்ளக் கூடியவரா நமது முதல் அமைச்சர்! இதுவரை எத்தனை நீதிபதிகள் சீர்திருத்திச் செழுமைப்படுத்திடும் நோக்கில் தங்கள் ஆழ்ந்த கருத்துகளை தமிழக முதல் அமைச்சரை நோக்கிச் சொல்லி யிருக்கிறார்கள். அதற்கெல்லாம் செவிமடுத்து வருத்தப்படாதவரா, இதற்காகச் சிந்தித்துத் தனது வழக்கமான பாதையைச் செப்பனிட்டுக் கொள்ளப் போகிறார்?
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!

16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments