Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆளுங்கட்சியினரே வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல: கருணாநிதி

ஆளுங்கட்சியினரே வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல: கருணாநிதி
, செவ்வாய், 18 ஆகஸ்ட் 2015 (13:45 IST)
ஆளுங்கட்சியினரே சட்டத்தைத் தங்கள் கையிலே எடுத்துக்கொண்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ளக்கூடியவை அல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னணியினரே ஆங்காங்கு ரகளையிலும், வன்முறையிலும் ஈடுபட்டுள்ளார்கள். பிரதமர் நரேந்திர மோடி அரசு மரபுகளைப் பற்றிக் கவலைப்படாமல், முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கே சென்று விருந்தில் கலந்து கொண்டது பற்றி, அனைத்துக் கட்சித் தலைவர்களும், ஊடகங்களும் விமர்சனம் செய்ததைப் போல, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் தன்னுடைய கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

பல்வேறு நிகழ்வுகளில் அதிமுகவினர் நாகரிகம் மற்றும் பண்பாட்டு எல்லைகளையெல்லாம் மீறி செய்யாத விமர்சனங்களா? இளங்கோவன் தெரிவித்த கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், அதிமுக ஆட்சியினர் வழக்கம் போல, அவதூறு வழக்கு தொடுக்கலாம், அல்லது அவரது கருத்துக்கு மாறுபட்டு ஜனநாயக ரீதியாகக் கருத்து தெரிவிக்கலாம்.

ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக, நாட்டிலே சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலே உள்ள ஆளுங்கட்சியினரே, சட்டத்தைத் தங்கள் கையிலே எடுத்துக்கொண்டு, காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிற்கும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டிற்கும் சென்று வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதும், அவருடைய உருவ பொம்மையை எரிப்பதும் யாரும் ஏற்றுக் கொள்ளக்கூடியவை அல்ல.

அதிலும் அதிமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முன்னணியினரே, முதலமைச்சரின் கண்ணிலே தங்களுடைய விசுவாச வேலைகள் பட வேண்டும் என்பதற்காகவே இத்தகைய அநாகரிகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. காவல் துறையினரும் இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிக்கக்கூடிய வகையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் வேலியே பயிரை மேயும் விபரீதத்திற்கு ஒப்பானதாகும். அதிமுகவினரின் இத்தகைய வன்முறைச் செயல்களை தி.மு. கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil