Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலைஞர் என்னும் கருத்துப் பெட்டகம்

கலைஞர் என்னும் கருத்துப் பெட்டகம்
, வியாழன், 9 ஜூன் 2016 (16:45 IST)
உலகின்  மிகப்  பெரிய ஜனநாயக  நாடான இந்தியாவில் தொண்ணூறு அகவைகள் கடந்தும் செயல் மிகு அரசியல் செய்து வருபவர்கள் இருவர்.


 


ஒருவர்  கேரளா மாநிலத்தில் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அச்சுதாநாத்தன் மற்றும் ஒருவர் திருக்குவளையில் பிறந்த கலைஞர் என்னும் கருணாநிதி. தொண்ணுற்றி மூன்று அகவை காணும், ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி மீது 2 ஜி ஊழல் ,குடும்ப அரசியல் , சர்காரியா கமிசன் ,நாத்தீக சமரசம்,ஈழப் பிரச்சனையை அவர் கையாண்ட விதம் என பரவலாக குற்றம் சாட்டபட்ட போதும், திருவாருரிலிருந்து சிந்ததாதரிபேட்டை வரை அவர் கண்ட தேர்தல் பிரச்சாரங்களில் அவர் வார்த்தைகள் தடுமாறி இருக்கலாம் ,சில வாக்கியங்களை திரும்ப திரும்ப சொல்லி இருக்கலாம் ,ஆனால் அவர் மனோபலம் மிகவும் வலிமையானது. கலைஞர் எனும் கருத்து பெட்டகத்தில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.
 
சோர்விலன்
 
அதிகாலை நடைபயணம்,யோகா,உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவது ,தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதில் எழுதுவது  ,கட்சி மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என தன்னை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதே கலைஞரின் அடையாளம் . முதுமையையோ ,உடல் சுகவீனத்தையோ காரணம் காட்டி தனது செயல்களில் ஒரு போதும் சமரசம்  செய்து கொள்ளாத ஓய்வறியா சூரியன். சட்டமன்ற தேர்தலின் போது அரசின் அவதூறு வழக்கை நேரடியாக எதிர் கொள்ள நீதிமன்றம் வந்த கலைஞர் இருபது வயது இளைங்கனுக்கே உரிய  வழக்கமான உற்சாகத்துடன் பங்கு பெற்றார்.

பிற தலைவர்கள் போல் அல்லாமல்,கலைஞர் சட்ட மன்றதிற்கோ, அறிவாலயதிற்கோ ,கட்சி மற்றும் பிற சமூக நிகழ்ச்சிகளில் பங்கு பெறாத நாட்களும் கூட ஊடகங்களில் தலைப்பு செய்தி ஆவார்.தான் சோர்விலான் என்பதையும்,ஓய்வறியா சூரியன் என்பதையும் கலைஞர் உலகத்திற்கு உரக்க சொல்லி கொண்டிருக்கிறார். தேர்தலில் திமுக தோல்வியுற்ற போதும் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தாத ஆணையம் என்ற காட்டமாக விமர்சித்தவர்.

ஸ்டாலினுக்கு முதல் அமைச்சரின் பதவி ஏற்பு  விழாவில் பத்தாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்ட போது முதல் அமைச்சர்  திருந்த மாட்டார் என்று கடுமையாக விமர்சிக்கிறார்.சட்டமன்றத்திற்கு ஏன் வந்தீர்கள் என்று நிருபர்கள் கேட்ட போது கடமை இருப்பதால் வந்திருக்கிறேன் என்கிறார். உழைப்பின் மூலம் சுவாசம் பெறுகிறார்  .
 
சொலல்வல்லன்
 
பண பலமோ, உடல் வாகோ,முக பொலிவோ ,சாதிய பின் புலமோ இல்லாத போது நாவன்மையை தமிழகத்தில் ஆயுதம்  ஆக்கி களம் கண்டவர் அண்ணா .அண்ணாவின் பாசறையில் பயின்ற கலைஞர் அதற்கு சற்றும் சளைக்காதவர்.சட்டசபையில் முதலைமைச்சர் விவாதத்தின் போது "சூரியன் அஸ்தமனம் ஆகி விட்டது,அஸ்தமனமான சூரியன் மீண்டும் உதிக்காது " என்று தாக்கி பேசுகிறார் .அதற்கு கலைஞர்,"காலையில் எழுந்து கிழக்கு நோக்கி பார்க்க சொல்லுங்கள்.அது மீண்டும் உதிக்கும்" என்று பதில் தருகிறார். முதலமைச்சர் திமுகவை முன்பு சிறுபான்மை அரசு என்று விமர்சனம் செய்த போது ஆம் எனது அரசு சிறுபான்மைனருக்கான அரசுதான் என்று பெருமையாக சொன்னவர்.
 
போர்குணம்
 
மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி தனது சகாக்களிடம் கருணாநிதியை பற்றி பேசும் போது , கருணாநிதி ஒருவரை ஆதரிக்கும் போது  தீவிரமாக ஆதரிப்பார் , அதே வேளையில் எதிர்க்கும் போது தீவிரமாக எதிர்ப்பார் என்றாராம் .கலைஞரின் போர் குணத்திற்கு அவரே தலைமை தாங்கி களம் கண்ட அரசியல் போராட்டங்களே சாட்சி.திராவிட இயக்க சித்தாந்தங்களுக்கு கலைஞர் தனது போர்க்  குணம் கொண்டு செயல் வடிவம் தந்தார் என்றால் மிகையாகாது .டால்மியாபுரம் போராட்டம் தொடங்கி செம்பரபாக்கம் ஏரி திறப்பு தொடர்பான போராட்டங்கள் வரை ,கலைஞரின் போர் குணத்தின் வெளிப்பாடே.
 
தவிர்க்க முடியாதவராய் இருப்பவர்.
 
அறுபது ஆண்டு கால அரசியல் வாழ்வில் பதிமூன்று சட்டமன்றங்களை கண்ட மூத்த உறுப்பினர். இன்றைய தமிழக அரசியல் விவாதங்கள் அனைத்திலும் பேசப் படுபவராய் இருப்பவர் கலைஞர்.ஒவ்வொரு விவாதத்தின் போதும் , கலைஞரின் தோளுக்கு புகழ் மாலை  சூட்ட படும் அல்லது முள் கிரீடம் சூட்ட படும். இரண்டையும் ஒன்றாக பாவிப்பதே கலைஞரின் இயல்பு. முதலமைச்சரை விமர்சிக்கும் பொழுது பின்புலங்களை கவனமாக கருத்தில் கொள்ளும் ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் கலைஞரை விமர்சனம் செய்யும் போது எதையும் கருத்தில் கொள்வது இல்லை.   முன்பு  துக்ளக் ஆசிரியர் சோ கலைஞரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசுகிறார் .அதுப் பற்றி  தனது சகாக்களிடம் பேசும் பொது எனது நண்பர் சோ இவ்வாறு பேசவில்லை என்றால் தான் எனக்கு ஆச்சரியம் என்றாராம் .பேசுபவராக இருப்பதும், பேச படுபவராக இருப்பதும், பேச்சின் படுப் பொருளாக இருப்பது என தினம் தினம் சுவாசம் பெறுகிறார்.
 
தனித்தன்மையுடன்  நினைத்ததை முடிப்பவன்
 
தமிழகத்தில் திராவிட இயக்க சித்தாதங்களின் வெளிப்பாடே சீர் திருத்தங்கள் .இந்த சீர்திருத்தங்களை முன் எடுத்து செல்ல சட்டங்கள் தேவைப்பட்டன .கலைஞர் திட்டங்களையும் கொள்கைகளையும் செயல் வடிவம் ஆக்கிய மிகச் சிறந்த செயல் அலுவலர் .பெண்களுக்கான சொத்து உரிமை சட்டம், சமச்சீர் கல்வி,    மகளிர் காவல் நிலையம்,கைவண்டி ரிக்க்ஷா ஒழிப்பு, தமிழை அலுவலக மொழியாக்கல் ,சமத்துவபுரம்,அரசு  விழா க்களில்  தமிழ் தாய் வாழ்த்து, சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் கொடி ஏற்றும் உரிமை என பல சட்ட மற்றும் திட்ட செயல் வடிவின் முன்னோடி கலைஞர் .
 
தம்பிகளை உடையோன்
 
யானையின் பலம் தும்பிக்கை .கலைஞரின் பலம் தம்பிமார்கள் எனும் உடன்பிறப்புகள்.கலைஞர் தன உடன்பிறப்புகளுக்கு முரசொலியில் எழுதும் கடிதங்கள் எல்லாம் இலக்கியங்கள் .சமீபத்தில் திருவாரூரில் நலத் திட்டங்களை தொடங்கி வைத்து பேசும் போது "எனது உயிரிலும் மேலான அன்பு உடன் பிறப்புகளே " என்று சொன்னவுடன் எழுந்த கரவொலிகள் இதற்கு .சான்று .தம்பி உடையோன் படைக்கு அஞ்சான் .அற்ப காரணங்களுக்காக அருகில் உள்ளவர்களிடம் பேசாமல் வாழும் நபர்களுக்கு மத்தியில் லட்சோப லட்ச வேறு வேறு தாய் வயிற்றில் பிறந்த அனைவரையும் ஒரு தாய் பிள்ளைகள் ஆக்கியவர் கலைஞர்.
 
தேவலோக தட்சன்
 
ஷாஜஹான் காலம் முகாலய கட்டிடக் கலையின் பொற்காலம் .கலைஞரின் ஆட்சி திராவிட கலைகளின் பொற் காலம். வள்ளுவர் கோட்டம் ,138 அடி வள்ளுவர் சிலை,புதிய தலைமை செயலகம் ,சென்னையில் பல மேம்பாலங்கள்.,அண்ணா நூற்றாண்டு நூலகம் இவை அனைத்தும் கலைஞர் ஓர் தேவலோக தட்சன் என்பதை நமக்கு சொல்லி கொண்டே இருக்கின்றன .வாழும் காலத்தில் நம்மை மற்றவர் பேச குறைந்த பட்சம் நிழல் தரும் ஓர் மரத்தையாவது நட வேண்டும்  கலைஞர் எனும் கருத்து பேழை நாம் வாழும் காலங்களிலே நமக்கு காலம் தந்த பரிசு. இன்றைய தலைமுறையினர் கலைஞரிடம் இருந்து உழைப்பையும் ,நாவன்மையையும்  ,தனித்தன்மையையும், செயல் ஆக்கும் தன்மையும், ,கூட்டு மனப்பான்மையையும், எப்போதும் உறவுகளின் தொடர்பில் இருப்பதும் ஆன பண்புகளை பெற வேண்டும்.

webdunia
   


 
இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
இயந்திரவியல் துறை ,
சத்தியபாமா பல்கலைக்கழகம் ,
சென்னை

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல நகைச்சுவை நடிகர் அதிமுகவில் "ஐக்கியம்"