நீதிமன்றம் தடை விதித்தும், கபாலி படத்தை வெளியிட்ட இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்படத்தின் தயாரிப்பு தரப்பு, நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கபாலி திரைப்படம் இன்று காலை 4 மணிக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடனும், வரவேற்புடனும் வெளியான இந்த திரைப்படம் நல்ல குவாலிட்டியுடன் இணையதளம் ஒன்றில் வெளியாகி உள்ளது.
கபாலி திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாவதை தடுக்க அந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சில இணையதளங்கள் முடக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு கபாலி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அதன்பின் காலை 6.20 மணிக்கு இணையதளத்தில் இப்படம் வெளியானது. சுமார் 1 மணி 50 நிமிடம் ஓடும் படம் அதில் உள்ளது. இந்த படத்தை குறுகிய நேரத்தில் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்ததாக கூறப்படுகிறது. நல்ல வீடியோ குவாலிட்டியுடன் கபாலி முழுப்படமும் வெளியாகி உள்ளது தயாரிப்பாளர் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
எனவே சட்டவிரோதமாக கபாலியை வெளியிட்ட இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் கலைப்புலி எஸ்.தாணு தரப்பு வக்கீல் குருமூர்த்தி இறங்கியுள்ளார்.
கபாலி படத்தை பதிவேற்றம் செய்யவும், பதிவிறக்கம் செய்யவும் அந்த வலைதளம் பயன்படுத்திய இணையதள சேவை வழங்கும் நிறுவனம் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.