சென்னையில் நேற்று நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்களின் பின்னணியில் ஈரானி கும்பலின் தொடர்பு உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நேற்று அதிகாலை 6 மணியளவில் பைக்கில் சென்ற இருவர் திருவான்மியூரில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்கு சைதாப்பேட்டை, கிண்டி என அடுத்தடுத்து பல்வேறு பகுதிகளில் இந்த பைக் கும்பல் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீஸார் ஒரே ஆட்கள்தான் அனைத்து சம்பவங்களையும் செய்தது என கண்டுபிடித்துள்ளனர்.
தொடர்ந்து குற்றவாளிகளை சேஸ் செய்து சென்ற போலீஸார், சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் தப்பிப்பதற்காக போர்டிங் செய்திருந்த குற்றவாளிகளை பிடித்தனர். இதில் மூன்றாவதாக ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில் உடனடியாக தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார் விஜயவாடாவிற்கு தப்பி செல்ல முயன்ற மூன்றாவது குற்றவாளி ஜாபர் குலாம் ஹுசைனை பித்தரகண்டா ரயில் நிலையத்தில் பிடித்துள்ளனர்.
நகைகளை மீட்பதற்காக தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்றபோது குற்றவாளி, போலீஸை துப்பாக்கியால் சுட முயன்ற நிலையில் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் ஈரானி கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
ஈரானி கும்பல் என்பவர்கள் யார்?
வட மாநிலங்களில் அச்சுறுத்தும் வகையில் உள்ள பவாரியா உள்ளிட்ட கொள்ளை கும்பல்களை போன்றே ஈரானி கும்பலும் கொள்ளையடிக்கின்றன. ஆனால் பவாரியா போல கொலை சம்பவங்களை அதிகம் செய்வதில்லை. இந்த ஈரானி கும்பலை சேர்ந்தவர்கள் ஈரான் நாட்டிலிருந்து வந்து இந்தியாவின் வட மாநிலங்களில் முக்கியமாக மகாராஷ்டிராவில் அதிகம் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இவர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியை குறிவைத்து திட்டமிட்டு ஒரு நாளில் உள்ளே புகுந்து பல இடங்களில் கொள்ளையடித்துவிட்டு சில மணி நேரங்களில் ரயில், விமானம் பிடித்து அங்கிருந்து தப்பி சென்று தலைமறைவாகி விடுவார்கள் என கூறப்படுகிறது. இதற்கு முன்பும் டெல்லி, மும்பை என பல வட இந்திய நகரங்களில் இவர்கள் ஏராளமான குற்றங்களை செய்து வந்துள்ளனர். அவ்வாறாக அவர்கள் சென்னையை குறிவைத்த நிலையில்தான் சிக்கியுள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K