Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓ.பி.எஸ், நத்தத்தை எச்சரித்த ஜெயலலிதா...! கார்டனில் நடந்த கடைசி நிமிட கலாட்டா

ஓ.பி.எஸ், நத்தத்தை எச்சரித்த ஜெயலலிதா...! கார்டனில் நடந்த கடைசி நிமிட கலாட்டா
, ஞாயிறு, 20 மார்ச் 2016 (20:48 IST)
கோவையில் இருந்து அவசரமாக போயஸ் கார்டன் வந்த அமைச்சர்கள் ஓ.பி.எஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதனிடம் நடத்தப்பட்ட அதிரடி விசாரணைகளைக் கேள்விப்பட்டு திகிலடித்துக் கிடக்கிறார்கள் அ.தி.மு.க அமைச்சர்கள்.
 

 
நேற்று முன்தினம் இரவு போயஸ் கார்டனில் இருந்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவசர அழைப்பு. 'அம்மாவைப் பார்க்க உடனே வாருங்கள்' என்ற அழைப்பால் அதிர்ந்து போன ஓ.பி.எஸ், நள்ளிரவு 11.50 ஃபிளைட்டைப் பிடித்து சென்னைக்கு வந்தார்.
 
காலையில் 10.20 மணிக்கு கார்டனுக்குள் நுழைந்தார். அவருக்குப் பின்னால் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் வந்தார். இவர்கள் வந்த தகவல் சொல்லப்பட்டாலும், உடனே அழைப்பு வரவில்லை. அதே நேரத்தில், கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பிதுரை, பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் உள்ளிட்டவர்களும் காத்திருந்தனர்.
 
இவர்கள் யாரும் ஓ.பி.எஸ்ஸிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசவில்லை. 'முதலில் இவர்களை மட்டும் அனுப்புமாறு' ஜெயலலிதா உத்தரவிட்டார்.
 
உள்ளே சென்ற இந்த மூவரிடமும், " தேர்தல் பிரசாரத்தில் பேசுவதற்கான இடங்களைத் தீர்மானியுங்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பேசிய இடங்களையே முக்கிய பாயிண்டுகளாக தீர்மானித்துக் கொள்ளுங்கள்" என்றவர், செய்ய வேண்டிய பணிகள் குறித்து சில குறிப்புகளையும் கொடுத்தார்.
 
இவர்கள் சென்ற பின்னர் ஓ.பி.எஸ்ஸும் நத்தமும் உள்ளே வரவழைக்கப்பட்டனர். உளவுத்துறை கடந்த சில வாரங்களாக சேகரித்த தகவல்கள், செய்த முறைகேடுகள், வாங்கிக் குவித்த சொத்துக்கள், அனைத்து துறைகளிலும் நடந்த செயல்பாடுகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் தெளிவாக இருந்தன.
 
ஒரு மணி நேரம் நடந்த விசாரணையில் எதுவும் பேச முடியாமல் இருவரும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நின்றுள்ளனர். ஒருகட்டத்தில், "எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிட்டு இந்தளவுக்கு நீங்கள் செயல்படுவீங்கன்னு நான் நினைச்சுப் பார்க்கலை. உங்களுக்கு மன்னிப்பே கிடையாது" என கார்டன் தலைமை கொந்தளிப்பு காட்ட, "அம்மா...நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். இனிமேல் இதுபோல் எந்த தவறும் நடக்காது" எனக் கெஞ்சியுள்ளனர்.
 
இதன்பின்னர் இருவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அனுப்பப்பட்டனர். எதுவும் பேச முடியாமல் சோகமான முகத்துடன் வெளியே வந்தனர் ஓ.பி.எஸ்ஸும் நத்தமும். 
 
இதன் பின்னர் மாலை 5.30 மணியளவில் மீண்டும் கார்டனுக்குள் வரவழைக்கப்பட்டார் ஓ.பி.எஸ். ஒரு மணிநேரத்திற்கும் மேல் பேச்சுவார்த்தை நடந்தது. இதன்முடிவில், சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கப்பட்டு அவர் திருப்பி அனுப்பப்பட்டதாகச் சொல்கின்றனர் கார்டன் ஊழியர்கள்.
 
ஓ.பி.எஸ்ஸின் சமீபத்திய செயல்பாடுகளால் கார்டனுக்குள் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பு அவ்வளவு விரைவில் அடங்காது என்கின்றனர். இந்நிலையில், தந்தை ஓ.பி.எஸ்ஸுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு பரிகாரம் தேட நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்திருந்தார் அவரது மகன் ரவீந்திரநாத்.
 
அங்குள்ள மடவார்குளம் வைத்தியநாத சுவாமியை கும்பிட்டுவிட்டு, குலதெய்வமான பேச்சியம்மனைக் கும்பிட்டார். இதன் பின்னர் மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு யாகம் ஒன்றையும் அவர் நடத்தியதாகச் சொல்கிறார்கள். 'பங்குனி மாதத்தில் குலதெய்வத்தை வணங்கினால் வந்த பிரச்னை அடியோடு நீங்கும்' என்பது ஐதீகமாம். 
 
ஓ.பி.எஸ் மகன் வளர்த்த யாகம், கார்டனின் கோபத்தைத் தணிக்குமா? இன்னும் என்ன மாதிரியான விளைவுகளை ஓ.பி.எஸ் எதிர்கொள்ளப் போகிறார் என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும்.

சி.ஆனந்த்குமார்

Share this Story:

Follow Webdunia tamil