Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

களப்பணியாற்ற தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்

களப்பணியாற்ற தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்
, சனி, 16 ஜனவரி 2016 (14:11 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்த தினத்தையொட்டி, கட்சித் தொண்டர்களுக்கு முதல் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தேர்தல் களப்பணியாற்ற தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


 
 
ஜெயலலிதா தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில்
 
எம்.ஜி.ஆர். வகுத்துத் தந்த கொள்கைகள் தமிழகத்தில் இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்குகளாகத் திகழும். கலைத் துறையிலும், அரசியலிலும், மக்களுக்கு பணியாற்றும் பொதுத் தொண்டுகளிலும் என்னை ஈடுபடுத்தியது எம்.ஜி.ஆர்.தான். அதற்குத் தேவையான பயிற்சிகளையும், பாடங்களையும் எனக்கு அளித்தார். எனவே தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று எம்.ஜி.ஆரை நான் மனதாரப் போற்றி வருகிறேன். அவரைப் பின்பற்றி தமிழக மக்களுக்காக என்னையே அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறேன்.
 
இரட்டை இலக்கில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை நாம் கொண்டாடும் இறுதி ஆண்டு இந்த ஆண்டு. இனி வரும் பன்னெடுங் காலங்களுக்கு அவருடைய பிறந்த நாள் மூன்று இலக்க ஆண்டுகளாகக் கொண்டாடப்படும். அடுத்து வரும் ஆண்டு அவரது பிறந்த நாள் நூற்றாண்டாக அமையப் போகிறது.
 
இப்பொழுது என்னுடைய தலைமையில் நடைபெற்று வரும் அரசு, தமிழக மக்களுக்கு ஒவ்வொரு உறுப்பினருக்கும் அரசாங்கத்தின் உதவியும், சலுகையும் பல வகைகளில் கிடைத்திடும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு, `வீடு உயர்ந்தால் நாடு உயரும், நாடு உயர்ந்தால் உலகம் உயரும்' என்ற தீர்க்கமான பாதையில் என் அரசு தமிழக மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்து, வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தை இட்டுச் செல்கிறது.
 
இருள் மண்டிய தீய சக்தியின் ஆட்சிக் காலத்தை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்கவும் மாட்டார்கள்; மறக்கவும் மாட்டார்கள். ஜனநாயகத்தின் அடிப்படைகளையே வேரறுக்கும் வகையில் "என் குடும்பம் மட்டும் எல்லாமும் பெற வேண்டும்; என் மக்களே எந்நாளும் ஆள வேண்டும்'' என்ற கயமையும், கீழ்மைத்தனமும் கொண்ட சிந்தனையுடைய தீய சக்தியும், அதன் நச்சு விழுதுகளும் இயங்குவதைத் தமிழகம் ஒரு போதும் ஏற்காது.
 
எனது தலைமையிலான அரசு, மக்களுக்கு ஆற்றி இருக்கும் பணிகளை வீடு வீடாக எடுத்துச் சொல்லி, மக்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, என் அர்ப்பணிப்பு வாழ்வை விளக்கிக் கூறி தேர்தல் பணி ஆற்றுங்கள். பொன் குடத்திற்கு பொட்டிட்டவாறு மக்களின் பேராதரவு பெற்ற என் அரசுக்கு உங்கள் களப்பணி சிறப்பினை சேர்க்கட்டும்.
 
கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து, தேர்தல் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் இப்பொழுதே தொடங்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil