Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது: ஜெயலலிதா

தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது: ஜெயலலிதா
, திங்கள், 11 மே 2015 (14:34 IST)
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது என்று முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்  செயலாலருமான ஜெயலலிதா தெரிவித்தார்.


 


 
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
இன்று (11.5.2015) கர்நாடக உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. என் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது.
 
என் மீது எனது அரசியல் எதிரிகளால் சுமத்தப்பட்ட பழியினைத் துடைத்திட்ட தீர்ப்பு இது. நான் எந்த தவறும் செய்யாதவர் என்பதை உறுதி செய்த தீர்ப்பு இது. புடம் போட்ட தங்கமாக நான் மீள இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது. 
 
கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்குப் பிறகு என் மீது மாறாப்பற்றும், அன்பும் கொண்ட தமிழக மக்கள் இறைவனிடம் வேண்டியதற்கு, இறைவன் அளித்த வரம் இது.
 
இந்த தீர்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என்று நான் கருதவில்லை. நீதி நிலை நாட்டப்பட்டு, தர்மம் வென்றது என்பதுதான் இந்த தீர்ப்பு. 
 
சூழ்ச்சிகள் என்றைக்குமே தற்காலிகமாக வெற்றி பெறலாம். ஆனால், இறுதி வெற்றி என்பது தர்மத்திற்கும், நேர்மைக்கும் தான் கிடைக்கும். திமுக வினாரால் சூழ்ச்சி வலைப் பின்னப்பட்டு, அதன் காரணமாக என் மீது போடப்பட்ட வழக்கில், சதியும் விதியும் சதிராடியதால் இடையிலே நீதி உறங்கி விட்டது.
 
இன்றைய தீர்ப்பு நீதியே என்றும் வெல்லும் என்பதை பறைசாற்றுகிறது. என்னையும், அஇஅதிமுகவையும் நேரடியாக வெல்ல முடியாது என்ற காரணத்தால் அரசியல் எதிரிகள் இறுதிவரை தங்கள் சூழ்ச்சிகளால் என்னையும், புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல், இதயதெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்ட மாபெரும் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தையும் அழித்து விடலாம் என்ற காழ்ப்புணர்வை இன்றுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 
நான் குற்றமற்றவர் என்பதில் எள் முனையளவும் நம்பிக்கை குலையாமல் எனக்காக பிரார்த்தனைகள் மேற்கொண்ட என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகி தாய்மார்களுக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான கழக உடன்பிறப்புகளுக்கும், அனைத்து தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக மன வேதனை அடைந்த 233 கழக உடன்பிறப்புகள் எனக்காக தங்களது இன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளார்கள் என்பது என்றென்றும் எனக்கு வேதனை அளிக்கக்கூடியதாகும்.
 
நேற்று (10.5.2015) கூட நான்கு கழக உடன்பிறப்புகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். இன்னும் சற்று நிதானத்தைக் கடைபிடித்திருந்தால் அவர்களும் தமிழக மக்களின் இந்த மகிழ்ச்சியை இன்று கொண்டாடி இருக்கலாம்.
 
தமிழக மக்கள் எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதே எப்போதும் எனது விருப்பம் ஆகும். தமிழக மக்களின் நலனே என் நலன் என்று நான் என்றென்றும் தமிழக மக்களுக்காகவே உழைத்திடுவேன். இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil