Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் 4 அம்மா உணவகங்கள் - ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னையில் 4 அம்மா உணவகங்கள் - ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
, திங்கள், 22 செப்டம்பர் 2014 (13:49 IST)
திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை வளாகம் உள்பட சென்னையில் உள்ள 4 மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகங்களைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா, குத்து விளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.

 
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, இன்று (22.9.2014) சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை வளாகத்தில், மருத்துவமனைக்கு வந்து செல்லும் புற நோயாளிகள், உள் நோயாளிகளின் உடனிருப்போர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்கிடும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “அம்மா உணவகத்தை”க் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். மேலும், இந்த விழாவில் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களையும் திறந்து வைத்தார். 
 
சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாடக் கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் எனக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் “அம்மா உணவகங்களை”, ஜெயலலிதா 19.2.2013 அன்று தொடங்கி வைத்தார்.
 
சென்னை மாநகராட்சியில் 203 அம்மா உணவகங்கள் ஏழை, எளிய மக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்று மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி மற்றும் பொங்கல் சாம்பார், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர்சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 2 சப்பாத்தியுடன் பருப்பு கடைசல் ஆகியவை தரமானதாகவும் சுகாதாரமாகவும் தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

webdunia
 
ஏழை எளிய மக்கள் அதிகளவில் வந்து செல்லும் அரசு பொது மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் முதற்கட்டமாக 20.11.2013 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்திலும், இரண்டாம் கட்டமாக 21.2.2014 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகங்களிலும் அம்மா உணவகங்களை ஜெயலலிதா திறந்து வைத்தார். 
 
பொது மக்களிடையே மாபெரும் வரவேற்பினைப் பெற்றுள்ள அம்மா உணவகங்கள் குறித்துச் செய்தி அறிந்து, இந்தத் திட்டத்தினைத் தாங்களும் செயல்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் எகிப்து நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகளும், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அம்மா உணவகங்களை நேரில் பார்வையிட்டு, அவை செயல்படும் விதம் குறித்துக் கேட்டறிந்து, சிறப்பாகச் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தினைப் பாராட்டியுள்ளனர். 
 
இவ்வாறு ஏழை எளிய மக்களுக்கு மிகப் பெரும் பயனளிக்கும் அம்மா உணவகங்களின் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை வளாகத்தில், மலிவு விலையில் தரமான உணவு வழங்கிடும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “அம்மா உணவகத்தை” ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, பொது மக்களுக்கு உணவு வழங்கி, விற்பனையைத் தொடங்கி வைத்தார். மேலும், இந்த விழாவில் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களையும் திறந்து வைத்தார். 

webdunia
 
அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனை வளாகத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட அம்மா உணவகத்தில் உணவு வகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றின் சுவையினைச் சோதித்துப் பார்த்தார்கள். அப்போது பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் இங்கு அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் வெளிநோயாளிகளும், உள்நோயாளிகளோடு உடனிருப்பவர்களும் உணவு வகைகளை உட்கொள்வதால் அவற்றை மிகுந்த கவனத்துடன் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரித்து வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தினார். 
 
இந்த நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா. துரைசாமி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., (ஓய்வு), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர் / சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil