Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பை மதிக்காததால் சென்னை துறைமுகம் இப்படியானது? - ராமதாஸ் குற்றச்சாட்டு

ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பை மதிக்காததால் சென்னை துறைமுகம் இப்படியானது? - ராமதாஸ் குற்றச்சாட்டு
, ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (16:14 IST)
மதுரவாயல் - சென்னை பறக்கும் பாலம் திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிக்கும்படியும் ஆணையிட்டும், அத்தீர்ப்பை மதிக்காத ஜெயலலிதா அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, பணிகளை மீண்டும் முடக்கியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ''வருவாய் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகமாக திகழ்ந்த சென்னை துறைமுகத்தின் இன்றைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சில ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி வரும் சென்னை துறைமுகம் காலப்போக்கில் செயல்படாமல் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
 
சென்னை துறைமுகத்தின் இந்த அவலநிலைக்கு முக்கிய காரணம் தமிழக அரசின் தன் முனைப்பும், ஊழலும் தான். சென்னை மாநகர எல்லையில் பகல் நேரத்தில் சரக்கு லாரிகள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் சரக்கு லாரிகள் இரவு நேரத்தில் மட்டுமே செல்ல முடியும்.
 
இதனால், சென்னை துறைமுகத்திற்கு ஒருமுறை சென்று சரக்குகளை இறக்கி வருவதற்கு குறைந்தபட்சம் 3 நாட்கள் ஆகிறது. இந்நிலையை மாற்றி சென்னை துறைமுகத்திற்கு எந்நேரமும் சரக்கு லாரிகள் சென்று வருவதற்கு வசதியாக, பாமக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மதுரவாயல் - சென்னை பறக்கும் பாலம் திட்டம் உருவாக்கப்பட்டு, 2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.
 
2010 ஆம் ஆண்டில் இத்திட்டப்பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், 2011ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக அரசு, இத்திட்டத்தின் ஒப்பந்தக்காரர்களிடமிருந்து எதிர்பார்த்த சில விஷயங்கள் நடக்காததால் இந்த திட்டத்தை செயல்படுத்த தடை விதித்தது.
 
அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் பறக்கும் பாலம் திட்டப்பணிகளை தொடங்க அனுமதிக்கும்படியும் ஆணையிட்டது. ஆனால், அத்தீர்ப்பை மதிக்காத ஜெயலலிதா அரசு, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, பணிகளை மீண்டும் முடக்கியது.
 
பறக்கும் பாலத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டிருக்காவிட்டால், சில ஆண்டுகளுக்கு முன்பே அதன் பணிகள் முடிவடைந்து போக்குவரத்து தொடங்கியிருக்கும். ஆனால், அதிமுக அரசின் பிடிவாதம் காரணமாக பறக்கும் பாலம் திட்டப்பணிகள் 10% முடிவடைந்த நிலையில் முடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததன் காரணமாக சென்னை துறைமுகத்திற்கு சென்று சரக்குகளை இறக்கி வருவதற்கான அவகாசம் 4 முதல் 5 நாட்களாக அதிகரித்திருக்கிறது.
 
இவ்வளவு நாட்கள் காத்திருப்பதால் ஏற்படும் கால தாமதம் மற்றும் பொருள் இழப்புகளை பொறுத்துக் கொள்ள முடியாத ஏற்றுமதியாளர்கள் எண்ணூர் அருகில் உள்ள காட்டுப்பள்ளி தனியார் துறைமுகம், ஆந்திர மாநிலத்திலுள்ள கிருஷ்ணபட்டினம் துறைமுகம் மூலம் தங்களின் உற்பத்திப் பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளனர்.
 
சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை அனுப்ப 5 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில், சென்னையிலிருந்து 188 கி.மீ. தொலைவிலுள்ள கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தில் அதிகபட்சமாக 12 மணி நேரத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு திரும்ப முடிவதே இதற்கு காரணமாகும்.
 
ஏற்கனவே, சென்னை துறைமுகத்திலிருந்து நிலக்கரி, இரும்புத்தாது போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கும் பொருட்களை கையாள உயர் நீதிமன்றம் தடை விதித்து விட்டதால் துறைமுகத்தின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டு, 5 ஆண்டுகளாக இழப்பை சந்தித்து வருகிறது. மற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை அதிகரிப்பதன் மூலம் இந்த இழப்பை ஈடுகட்ட சென்னை துறைமுகம் திட்டமிட்டிருந்த நிலையில், பறக்கும் பாலம் திட்டம் முடங்கியதால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன.
 
இதனால் திருப்பெரும்புதூர் பகுதியில் உலர் துறைமுகம் அமைக்கும் திட்டத்தையும், சென்னை துறைமுகத்திற்குள் ரூ.10,000 கோடியில் மேற்கொள்ளவிருந்த விரிவாக்கத் திட்டங்களையும் துறைமுக நிர்வாகம் கைவிட்டு விட்டது. இதேநிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் துறைமுகத்தை மூட வேண்டிய நிலை ஏற்படும். அது தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் தடையாக அமையும்.
 
அதுமட்டுமின்றி, சென்னை துறைமுகத்தை விட கிருஷ்ணப்பட்டினம் துறைமுகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு ஏற்றதாக இருப்பதால் புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்கள் ஆந்திரத்திற்கு செல்லும் நிலை ஏற்படும். இதைத் தடுக்க மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டத்தை செயல்படுத்தி சென்னை துறைமுகத்தை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு ஏற்றதாக மாற்றுவது தான் ஒரே வழியாகும்.
 
எனவே, மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற்று பணிகளைத் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்.
 
அதிமுக அரசு அவ்வாறு செய்யாத பட்சத்தில், இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் 2016 ஆம் தேர்தலுக்கு பிறகு அமையும் பாமக ஆட்சியில் இத்திட்டத்திற்கு எதிரான அனைத்து தடைகளும் விலக்கப்படும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil