Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை, மின்சார தட்டுப்பாடு திட்டமிட்ட சதி என ஜெயலலிதா பேச்சு

Webdunia
சனி, 12 ஏப்ரல் 2014 (11:37 IST)
தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை எனவும் மின்சார தட்டுப்பாடு திட்டமிட்ட சதி எனவும் பாளையங்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 
தமிழக முதல்வரும்,  அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி.பிரபாகரனை ஆதரித்து பாளையங்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை இல்லை என்றும், மின்சார தட்டுப்பாடு திட்டமிட்ட சதியால் ஏற்படுத்தப் படுகிறது என்றும் கூறினார்.
 
இது குறித்து அவர் பேசியதாவது, ' எனது முந்தைய ஆட்சி காலங்களில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை; மின்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. மாறாக, எனது முந்தைய ஆட்சி காலங்களில் தமிழகத்தின் தேவை போக, உபரியாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதால் பிற மாநிலங்களுக்கு அதனை விற்று வருவாயும் ஈட்டினோம். ஆனால், 2006 ஆம் ஆண்டிற்கு  பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. இதனை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
 
2006 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் வரை, ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை, நான் ஆட்சியை விட்டுப் போகும் போது, தமிழ்நாடு மின்சார உற்பத்தியில் உபரி மாநிலமாகத்தான் இருந்தது. அதன் பின்னர், திமுக ஆட்சி நடத்திய காலத்தில் தான் மின் நிலைமை மிகவும் மோசமடைந்தது.
 
தி.மு.க. ஆட்சி காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு 8 ஆயிரம் மெகாவாட் தான். ஆனால், இப்போது எனது ஆட்சி காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கு மேல் மக்கள் தேவைக்கேற்ப வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டு வருகிறது.
 
ஆகவே, கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதம் வேளையில் நிலைமை சீர்செய்யப்பட்டுவிட்டது. அப்போது மின் வெட்டே இருக்கவில்லை. இதனை கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நான் பெருமிதத்துடன் தெரிவித்தேன். சட்டமன்றத்தில் கூறினேன். இப்படிப்பட்ட ஒரு மோசமான சூழ்நிலையில் ஆட்சிக்கு வந்த பிறகு, பகீரத முயற்சி எடுத்து எனது ஆட்சி, எனது அரசு வெற்றிகரமாக நிலைமையை சமாளித்துவிட்டது. மின் உற்பத்திக்கும், மின் தேவைக்கும் உள்ள அந்த இடைவெளியை நாங்கள் கடந்துவிட்டோம்; சரிசெய்துவிட்டோம்; இனிமேல் தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்காது. இந்த சாதனையை நாங்கள் புரிந்திருக்கிறோம் என்று அறிவித்தேன்.
 
நான் சொன்னது தான் தாமதம். அதன் பிறகு சில நாட்களுக்குள் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வந்தது. அந்த நேரத்தில், சொல்லிவைத்தாற்போல் ஒன்றன்பின் ஒன்றாக மின் நிலையங்கள் எல்லாம் பழுதடைந்துவிட்டன. சொல்லிவைத்தாற்போல அத்தனை மின் நிலையங்களும் ஒரே சமயத்தில் பழுதடைந்துவிட்டன. அதனால் கடுமையான மின்பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போதே, ஏற்காடு இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்ட போது நான் வெளிப்படையாக சொன்னேன். சதித்திட்டம் நடக்கிறது. வேண்டுமென்றே மின்உற்பத்தி நிலையங்களை பழுதடையச் செய்திருக்கிறார்கள். ஆகவே, நிலைமையை சரிசெய்வோம் என்று சொன்னேன். அதன் பிறகு ஓரளவுக்கு நிலைமை சரிசெய்யப்பட்டது. 
 
இன்று மின் பற்றாக்குறை என்ற நிலைமை தமிழ்நாட்டில் இல்லை. மக்கள் தேவைக்கேற்ப மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கு மேல் தேவைப்பட்டால் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கிக்கொண்டு இருக்கிறோம். ஆகவே, மின் பற்றாக்குறை இல்லை. தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
 
அப்படியானால், அடிக்கடி மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது? திடீரென்று 2 மின் நிலையங்கள் ஒரு நாளில் பழுதடைந்துவிடுகிறது. இதனால் கிட்டத்தட்ட 1,000 மெகாவாட், 2,000 மெகாவாட் மின் உற்பத்தி குறைகிறது. அந்த நேரத்தில் தமிழகமெங்கும் மின் வெட்டு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. போர்க்கால அடிப்படையில் பழுதடைந்த நிலையங்களை சரிசெய்கிறோம்.
 
அதன் பின்னர், 2 நாட்கள் கழித்து மீண்டும் 3 மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்து விடுகின்றன. ஏதோ ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள். டிரிப் ஆகிவிட்டது; கன்வேயர் பெல்ட் அறுந்துவிட்டது; திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுவிட்டது என்று சொல்லுகிறார்கள். மீண்டும் அதை சரி செய்கிறோம். அதை சரி செய்த உடனேயே மறுபடியும் வேறு ஏதாவது ஒரு மின் நிலையத்தில் இப்படி பழுது ஏற்படுகிறது.
 
நானும் யோசித்துப் பார்த்தேன். நான் ஏற்கனவே 2 முறை முதலமைச்சராக இருந்திருக்கிறேன். எனது முந்தைய ஆட்சி காலங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் இப்படி தினசரி பழுதடையவில்லை. மின் உற்பத்தி நிலையங்களில் தினசரி இப்படி பழுதுகள் ஏற்படாது; தவறுகள் ஏற்படாது.
 
ஆகவே, திட்டமிட்ட சதி நடைபெறுகிறது என்று இந்த நேரத்தில் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். செயற்கையான ஒரு மின் பற்றாக்குறையை ஏற்படுத்தி வேண்டுமென்றே மின் உற்பத்தி நிலையங்களில் இத்தகைய பழுதுகளை ஏற்பட செய்து, அதன் காரணமாக செயற்கையான மின்பற்றாக்குறையை ஏற்படுத்தி மின்வெட்டு செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி, இதன் மூலம் மக்களுக்கு அதிமுக அரசு மீது அதிருப்தி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இதை செய்கிறார்களோ என்று அனைவரும் இப்போது சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார்கள். எங்கும் இதே பேச்சாக இருக்கிறது.
 
ஆகவே, ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழகத்தில் மின் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தினசரி இப்படி மின் உற்பத்தி நிலையங்களில் பழுதுகள் ஏற்படுகின்றன என்றால் இது திட்டமிட்ட சதிதானோ என்று தோன்றுகிறது. ஆகவே, ஆராய்ந்து, விசாரித்து, பரிசீலித்து இந்த சதி வேலைக்கு, நாச வேலைக்கு யார் காரணம் என்பதை நிச்சயமாக கண்டுபிடித்தே தீருவோம். மக்களின் துன்பத்தைப் பற்றி கவலைப்படாமல், மக்கள் மின்வெட்டு என்ற துன்பத்தை சகித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை பற்றி கவலைப்படாமல் வேண்டுமென்றே இப்படி நாச வேலையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இனங்கண்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மின் நிலைமை சீர் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் கொடுத்து ஆடையின்றி ஆண்களை புகைப்படம் எடுத்த பெண்.. இளைஞர்கள் புகார்..!

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் கைது.. ஜாமின் நிபந்தனையை மீறினாரா?

இந்தியன் வங்கி தேர்வு எழுத வெளி மாநிலங்களில் தேர்வு மையம்: சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: துபாய் செல்லும் தனிப்படை போலீஸ்.. என்ன காரணம்?

இன்று தான் பள்ளி திறப்பு.. அதற்குள் 13ஆம் தேதி வரை விடுமுறை அளித்த சென்னை பள்ளி..!

Show comments