Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி
, வியாழன், 6 ஆகஸ்ட் 2015 (19:31 IST)
ஆந்திராவில் செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான 20 தமிழர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆந்திர மாநிலம், ஸ்ரீவாரிமெட்டு மற்றும் ஈசாகுண்டா பகுதியில் உள்ள சேஷாசல வனப்பகுதியில் ஆந்திர அரசின் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் 7.4.2015 அன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 12 நபர்கள், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 நபர்கள் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 20 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். 
 
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 20 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
 
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு, தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு ஏதுவாக அரசு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். 
 
உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களில் பெரும்பாலானோர் இளம் விதவைகளாக இருப்பதாலும், அவர்களது ஏழ்மை மற்றும் துயர நிலை கருதியும், அவர்களது குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், முதலமைச்சர் ஜெயலலிதா, இம்மனுதாரர்களது கோரிக்கையினை ஏற்று தகுதிக்கேற்ப 17 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு சமையல் உதவியாளர் பணியும், 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு சத்துணவு ஒருங்கிணைப்பாளர் பணியும் மற்றும் ஒருவரது வாரிசுதாரருக்கு அங்கன்வாடி உதவியாளர் பணியும் வழங்கிட ஆணையிட்டார். 
 
அதன் அடிப்படையில் மேற்கண்ட 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக 5 நபர்களுக்கு அவர்களுக்கான பணி நியமன ஆணையினை வழங்கினார்.

Share this Story:

Follow Webdunia tamil