Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜல்லிக்கட்டு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுற்றறிக்கை: ஜெயலலிதா

ஜல்லிக்கட்டு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுற்றறிக்கை: ஜெயலலிதா
, வெள்ளி, 8 ஜனவரி 2016 (15:35 IST)
ஜல்லிக்கட்டு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பும்படி தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.


 

 
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டு தமிழகத்தில் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்த ஜல்லிக்கட்டு, தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதி பலிப்பதாகவும் அமைந்துள்ளது.
 
ஜல்லிக்கட்டு தொடர்பாக 2006 ஆம் ஆண்டு முதலே பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக கடந்த 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த தடை விதித்து தீர்ப்பளித்தது.
 
உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு, மனுவினை தாக்கல் செய்யும்படி நான் உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழக அரசால் 19.5.2014 அன்று இந்த மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்னமும் நிலுவையில் உள்ளது. 
 
ஜல்லிக்கட்டு நடை பெறுவதை உச்ச நீதிமன்றம் தடை செய்து ஆணை வழங்கியதற்கு முக்கியக் காரணம், திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு 11.7.2011 அன்று வெளியிட்ட அறிவிக்கை தான்.
 
அந்த அறிவிக்கையின்படி காட்சி விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டன. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. 
 
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது. 7.8.2015 அன்று பிரதமரிடம் தமிழகம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை நான் அளித்துள்ளேன்.
 
அதில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழகத்தில் நடத்த வழிவகுக்கும் வகையில் உரிய சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நான் பிரதமரை கேட்டுக் கொண்டிருந்தேன்.
 
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இது குறித்த மசோதா ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்யும் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.
 
இது பற்றி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த கூட்டத் தொடரில் பேசியுள்ளனர். எனினும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அனுமதிக்க வகை செய்யும் மசோதா எதுவும் தாக்கல் செய்யப்படாத சூழ்நிலையில், நான் பிரதமருக்கு இது குறித்து 22.12.2015 அன்று கடிதம் ஒன்றை எழுதினேன்.
 
அந்தக் கடிதத்தில் இந்த பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
 
தமிழகத்தில் வரும் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்குத் தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டும் என பிரதமரை நான் தொடர்ந்து வலியுறுத்திய தன் காரணமாக, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், 7.1.2016 அன்று ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
 
இந்த அறிவிக்கையில் காளைகள் என்பது காட்சி விலங்குகள் பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், ஒரு காப்புரையை வெளியிட்டுள்ளது.
 
அதில் உச்ச நீதிமன்றம் தனது 7.5.2014 நாளிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ள 5 உரிமைகள் மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் உள்ள கூறுகள் ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
 
மத்திய அரசின் இந்த அறிவிக்கையின் காரணமாக, தமிழ்நாட்டில் வரும் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை.
 
தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திட இயலும் என்பதால், எதிர் வரும் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாட இயலும்.
 
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக, மத்திய அரசின் அறிவிக்கையையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பும்படி நான் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்த பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil