Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக அரசிற்கு வழக்கு போடுவது என்ன புதிதா? - விகடன் மீதான வழக்கிறகு ஜி.ஆர். கண்டனம்

அதிமுக அரசிற்கு வழக்கு போடுவது என்ன புதிதா? - விகடன் மீதான வழக்கிறகு ஜி.ஆர். கண்டனம்
, வியாழன், 26 நவம்பர் 2015 (19:46 IST)
ஆனந்த விகடன் பத்திரிக்கை மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், ''ஆனந்த விகடன் இதழின் ‘மந்திரி - தந்திரி’ தொடரில் ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகள் பற்றியும் கட்டுரை வெளியாகி வந்தது. நவம்பர் 25 ஆம் தேதியிட்ட இதழில் தமிழக முதல்வரின் செயல்பாடுகள் குறித்தும் எழுதியிருந்தனர்.
 
விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட 181 அறிக்கைகளின், பல பகட்டான திட்டங்கள் இன்றும் செயலுக்கு வராதது. மின்வெட்டைப் போக்கும் விதத்தில் புதிதாக ஒரு திட்டம் கூட செயல்படுத்தாத நிலைமை. ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதிலும், உள் கட்டமைப்பை உருவாக்குவதில் அரசின் தோல்வி, முட்டை வாங்குவதில் எழுந்த முறைகேடு குற்றச்சாட்டு, கிரானைட், தாது மணல், ஆற்று மணல் என இயற்கை வளங்கள் கொள்ளை, மது விற்பனையின் அபாயகரமான உயர்வு என்பனவற்றை விமர்சித்து ஒரு விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தனர்.
 
இந்தக் கட்டுரைக்காக விகடன் நிறுவனத்தின் மீது மாநில முதல்வர் வழக்குத் தொடுத்துள்ளார். ஏற்கனவே, மதுவிலக்கை வலியுறுத்தி பாடல் இயற்றிய கோவன் என்ற பாடகர் மீது ஜாமீனில் வர முடியாத வகையில் ‘தேச துரோக’ வழக்குத் தொடுக்கப்பட்டது.
 
இதற்கு முன்பும் தி இந்து மற்றும் தினமலர் பத்திரிகைகள் மீது தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது. ஜனநாயக விரோத நடவடிக்கையை ஒரு கொள்கையாக பின்பற்றுவதை போல தமிழக அரசு நடந்து கொள்கிறது.
 
இன்னும் ஒரு படி மேலாக, ஃபேஸ்புக் பக்கம் காரணமேதுமின்றி முடக்கப்பட்டிருப்பதாகவும், ஆனந்த விகடனின் முகவர்கள், விற்பனையாளர்கள், கடைக்காரர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் ஆகியோரைத் தொடர்புகொள்ளும் காவல் துறையைச் சேர்ந்த சிலர், ஆனந்த விகடனை விற்கக் கூடாது என்று அச்சுறுத்துவதாகவும், மீறி விற்பனை செய்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்றும் மிரட்டி வருவதாகவும் வரும் செய்திகள் அதிமுக அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகயை எடுத்துக் காட்டுகிறது.
 
தமிழக அரசின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பலவும் புதிதாக கண்டறியப்பட்டவை அல்ல. ஏற்கனவே, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருபவையே.
 
உரிய விதத்தில் அவற்றைக் கேட்டு, சரி செய்துகொள்ள எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும், அவற்றை பயன்படுத்திக் கொள்ளாத அரசு விமர்சனத்தை சகித்துக் கொள்ள முடியாமல் எதேச்சதிகாரமாக செயல்படுகிறது.
 
அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் மாநில அரசின் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
 
விகடன் இதழ் மீது தொடுக்கப்பட்ட வழக்கை  மாநில அரசு திரும்ப பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது'' எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil