வாகன விபத்து தொடர்பாக மதுரை ஆதீனம் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஆதீனம் சமீபத்தில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது உளுந்தூர்பேட்டை அருகே அவரது கார் மற்றொரு காருடன் மோதி விபத்திற்குள்ளானது. அதை தொடர்ந்து பேட்டியளித்த ஆதீனம் உளுந்தூர்பேட்டையில் நடந்த விபத்து தீவிரவாத தாக்குதல் எனவும், காரில் வந்தவர்கள் குல்லா அணிந்திருந்ததாகவும், தாடி வைத்திருந்ததாகவும் கூறியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதி சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அது ஏதேச்சையாக நடந்த விபத்துதான் என தெரிய வந்தது. மேலும் காரை அதிவேகமாக ஓட்டியது உள்ளிட்டது தொடர்பாக ஆதீனம் டிரைவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தற்போது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் வாகன விபத்து தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதுடன், மத ரீதியான மோதல்களை தூண்டும் வகையில் பேசிய மதுரை ஆதீனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Edit by Prasanth.K