Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதலீட்டாளர் மாநாடு ஜெயலலிதாவுக்காக தள்ளி வைக்கப்பட்டதா?: கருணாநிதி கேள்வி

முதலீட்டாளர் மாநாடு ஜெயலலிதாவுக்காக  தள்ளி வைக்கப்பட்டதா?: கருணாநிதி கேள்வி
, வியாழன், 23 ஏப்ரல் 2015 (08:30 IST)
முதலீட்டாளர் மாநாடு தள்ளிவைக்கப்பட்டது ஏன்? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  
 
2015 ஆம் ஆண்டு மே மாதத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று இன்றைய முதல்மைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு அடுத்து ஓராண்டே உள்ள நிலையில், 2015 மே மாதத்தில் மாநாடு நடத்தி என்ன பயன் ஏற்படப்போகிறது என்று நான் அப்போதே கேட்டிருந்தேன். அதற்கும் பதிலளிக்கவில்லை.
 
இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்க, கர்நாடக மாநில முதலமைச்சர் தமிழகத்திலே உள்ள ஒரு நகரில், தமிழகத்திலே உள்ள தொழில் அதிபர்களையெல்லாம் அழைத்து கர்நாடகாவில் வந்து தொழில் தொடங்குங்கள் என்று அழைக்கிறார் என்றால், அதற்கு என்ன அர்த்தம் என்பதை சாதாரண ஒரு தொழில் அதிபர் கூடப் புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறியிருந்தேன்.
 
ஜெயலலிதா கோவையில் பேசும்போது, அவருடைய மூன்றாண்டு கால ஆட்சியில் 33 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 31,706 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட 33 நிறுவனங்களில், இதுவரை எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிலை தொடங்கியிருக்கின்றன என்ற விவரத்தைத் தெரிவிக்க முடியுமா? புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல நிறுவனங்களுடன் போடலாம். உண்மையில் தொழில் தொடங்கினால்தானே பயனளிக்கும்! 
 
இந்நிலையில் இப்போது, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து, அந்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சருடனும், அதைப்போல தமிழகத்தில் மேலும் முதலீடு செய்வது குறித்து அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னருடனும் பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒரு செய்தி வந்தது. அதுவும் என்னவாயிற்று என்று தெரியவில்லை.
 
தொழில்துறை அமைச்சர், சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் வர உள்ளதாகவும், அதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திலே முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். அவர் அவ்வாறு அறிவித்த ஒரு சில நாட்களிலேயே முதலீட்டாளர்கள் மாநாடு மேலும் தள்ளிவைக்கப்படுவதாக அரசினால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளூர் தொழில் அதிபர்களை அழைப்பதற்கான ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றதாகவும், அந்த கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், தொழில் துறையின் சிறப்பு செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டதாகவும், அதிலே அமைச்சர்கள் பேசியபோது மே மாதத்தில் மாநாடு நடைபெறும் என்றுதான் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியாமலேயே, மாநாடு ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பரிலே நடைபெறும் என்று சென்னையில் அறிவிப்பு வந்துள்ளது. அமைச்சரவை எந்த அளவுக்கு ஒருங்கிணைப்போடு செயல்படுகிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
 
இந்த முதலீட்டாளர்கள் மாநாடு இவ்வாறு தள்ளிவைக்கக்கூட காரணம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுதலையாகி, அவர் முதலமைச்சர் பொறுப்பிலே இருக்கிற போது இந்த மாநாடு நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் மாநாடு மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த மாநாடு மாத்திரமல்ல; தமிழக அரசின் வேறு சில திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு முடிந்த போதிலும், ஜெயலலிதா முதலமைச்சராக இல்லாத நேரத்தில், அந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து விடக்கூடாது என்பதற்காகவே திறப்பு விழாக்கள் ஒத்திவைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக நூற்றுக்கணக்கான பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகங்களின் பயன்பாட்டுக்காக வாங்கப்பட்டவை தொடங்கிவைக்கப்படாத காரணத்தால், அந்த பேருந்துகள் வீணாக கிடப்பதாகவும், அதனால் போக்குவரத்து கழகங்களுக்கு பெரும் இழப்பு என்று செய்திகள் வருகின்றன. அதைப்போலவே மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்றவைகளின் திறப்பு விழாக்களும் நடைபெறவில்லை. 
 
இவ்வாறு மாநாட்டு தேதியை ஒத்திவைக்க காரணம், மே மாதம் கடுமையான கோடை என்று சொல்லியிருக்கிறார்கள். செப்டம்பர் மாதத்திற்கு தற்போது ஒத்திவைத்திருக்கிறார்களே, அந்த மாதத்தில் மழை கடுமையாக இருக்குமே; ஜெயலலிதா வழக்கில் அதற்குள் தீர்ப்பு வரவில்லை என்றால், செப்டம்பரில் மழை என்பதால் மீண்டும் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு ஒத்திவைக்கப்படுமா?  
 
நமது மாநிலத்தில் முதலீடுகளைச் செய்வதற்காக வெளிநாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பதாகவும், அந்த நாடுகளில் கருத்தரங்குகளை நடத்திய போது இது தெரிய வந்ததாகவும் அரசு தரப்பில் கூறியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்ற போது, தமிழக அரசு அந்த மாநாட்டினை நடத்தாமல் காலதாமதம் செய்வது முறை தானா?
 
அ.தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்று நான்காண்டுகள் முடிந்த பிறகு, சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டிற்கான தேதியினை மூன்றாவது முறையாக ஒத்திவைக்கிறது என்றால் தொழில் வளர்ச்சியிலே அ.தி.மு.க. அரசுக்கு உள்ள அக்கறை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? ஆனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியிலே தங்களுக்குத்தான் பொறுப்பு என்பதைப் போல அ.தி.மு.க. ஆட்சியினர் பேசி வருகிறார்கள்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil