தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபமாக உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில் மகளிரணி நிர்வாகி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் களமிறங்கிய விஜய் கட்சியின் மாநாட்டிற்கு பல லட்சம் பேரை சேர்த்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை, தேர்தல் திட்டமிடல் என அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் உட்கட்சி பூசல்களும் தொடங்கியுள்ளது.
தேனி மாவட்டம் வடுகப்பட்டியை சேர்ந்த சத்யா என்ற பெண், விஜய் மக்கள் இயக்கம் தொடங்கி தமிழக வெற்றிக் கழகம் கட்சி வரையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தற்போது தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி உறுப்பினராக உள்ள அவர், சமீபத்தில் வெளியிட்ட வீடியோதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் கடந்த 7 ஆண்டு காலமாக நடிகர் விஜய்க்காக மக்கள் பணியில் இருந்து வரும் நிலையில், தன்னை கட்சி பணிகளை செய்ய விடாமலும், தனக்கு அங்கீகாரம் கிடைக்க விடாமலும் முட்டுக்கட்டை போடுவதாக தேனி மாவட்ட தலைமையை சாடியுள்ளார் சத்யா.
தன் மீது ஏற்கனவே காவல்நிலையத்தில் பல வழக்குகள் இருப்பதாக மேலிடத்தில் இல்லாததை எல்லாம் சொல்லி தன்னை ஓரம்கட்ட மாவட்ட தலைமை முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் இணைந்தபோது, பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த தங்களுக்கு பதவி அளிக்கவில்லை என தவெகவினர் சிலர் பேசிய வீடியோ வைரலானது.
இந்நிலையில் இதுபோன்ற புகார்கள் மீது விஜய் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Edit by Prasanth.K