Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் இன்றும் 4 லட்சம் பேர் மனித மலத்தை மனிதனே அள்ளுகின்றனர்: திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்தியாவில் இன்றும் 4 லட்சம் பேர் மனித மலத்தை மனிதனே அள்ளுகின்றனர்: திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு
, வியாழன், 3 செப்டம்பர் 2015 (22:52 IST)
இந்தியாவில் இன்றும், 4 லட்சம் பேர் மனிதனின் மலத்தை மனிதனே கையால் அள்ளும் வேலையில் ஈடுபட்டுவரும் கொடுமை தடுத்து நிறுத்தப்படவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
 

 
இது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மதுரை மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களான பாதாளச் சாக்கடைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், மயானப் பணியாளர்கள் உள்பட 4000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்தப் போராட்டம் விடுதலைச் சிறுத்தைகளின் தொழிற்சங்கமான எல்.எல்.எஃப்., சி.ஐ.டி.யூ, எல்.பி.எஃப், ஏ.ஐ.டி.யு.சி. ஆகிய அங்கீகரிக்கப்பட்ட அனைத்துச் சங்கங்களின் சார்பில் நடைபெற்று வருகிறது.
 
நாட்டைத் தூய்மைப்படுத்துகிற பணிகளில் ஈடுபட்டு, பணியாற்றுபவர்களின் வாழ்க்கைத் தரம் நாடு முழுவதும் மிக மோசமானதாக உள்ளது. இதற்கான சில திட்டங்களை மாநில, மத்திய அரசுகள் அறிவித்திருந்தபோதிலும், அத்திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
 
இந்தியாவைத் தூய்மைப்படுத்த வேண்டுமென்று பிரதமர் நரேந்திரமோடி ‘தூய்மை இந்தியா’ என்ற திட்டத்தை அறிவித்தார்.  அதற்காக கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி விளம்பரங்களுக்காகச் செலவிட்டு வருகின்றனர்.
 
ஆனால், இன்னும் இந்தியாவில் 4 லட்சம் பேர் மனிதனின் மலத்தை மனிதனே கையால் அள்ளும் வேலையில் ஈடுபட்டுவரும் கொடுமை தடுத்து நிறுத்தப்படவில்லை. அந்த வேலைகளுக்குப் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவில்லை.
 
துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வருகிற தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்பையும் அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் எந்த நடவடிக்கையும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்த மோடி அரசு எடுக்காதது வேதனையளிக்கிறது. மதுரை மாநகராட்சியில் மட்டுமல்லாது, துப்புரவுப் பணியாளர்கள் நிலை நாடு முழுவதும் இத்தகைய நிலையில்தான் உளளனர்.
 
வேலூர் மாநகராட்சியிலும் திடக் கழிவுகளை அப்புறப்படுத்தாமல் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது.  அங்கு திடக் கழிவுகளை அப்புறப்படுத்த புதிய பராமரிப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தியும், ஒட்டுமொத்தத் துப்புரவுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 7 வரை தொடர் உண்ணாநிலைப் போராட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேலூரில் நடைபெற உள்ளது.
 
மதுரை மாநகராட்சியில் 2006ஆம் ஆண்டு முதல் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.  தற்போது வழங்கப்படும் ரூ. 115 தினக்கூலியை அரசு நிர்ணயித்த தொகையான ரூ. 225 ஆக உயர்த்த வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும்.  2000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
 
மேலும், துப்புரவுப் பணியாளர்களின் நலன்களுக்காக மத்திய அரசு அறிவித்த திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக அரசு உடனே தீர்வு காண வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil