Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’எனக்கு நானே ஆறுதல் கூற வேண்டிய நிலையில் உள்ளேன்’ - சற்குணப் பாண்டியனுக்கு கருணாநிதி இரங்கல்

’எனக்கு நானே ஆறுதல் கூற வேண்டிய நிலையில் உள்ளேன்’ - சற்குணப் பாண்டியனுக்கு கருணாநிதி இரங்கல்
, சனி, 13 ஆகஸ்ட் 2016 (13:14 IST)
எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் சற்குணப் பாண்டியன் மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த திருமதி சற்குணப் பாண்டியன் நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு மறைந்து விட்டார் என்ற செய்தியினை இன்று காலையில் கேட்டு எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளேன்.
 
சின்னஞ்சிறுமியாக இருந்த காலத்திலிருந்து கழக மேடைகளிலே பேசுகின்ற பேச்சாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் மகளிர் அணியிலே இடம் பெற்று, அதன் தலைவராக வளர்ந்து, கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் களில் ஒருவர் என்ற அளவுக்கு படிப்படியாக உயர்ந்தவர் தான் சற்குணப் பாண்டியன்.
 
மாணவர் அணி, மகளிர் அணி, வடசென்னை மாணவர் அணி, சென்னை மாவட்ட மகளிர் அணி, மாநில மகளிர் அணி, துணைப் பொதுச் செயலாளர் என்று அவர் வகித்த பல பொறுப்புக்களிலும் சிறப்பாகப் பணியாற்றி கழகத்தினர் அனைவரது மதிப்பையும் பெற்றவர் சற்குணம்.
 
கழகத்தின் சார்பில் 1989ஆம் ஆண்டிலும், 1996ஆம் ஆண்டிலும் ராதாகிருஷ்ண நகர் தொகுதியிலிருந்து சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, சமூக நலத் துறை அமைச்சராக இருந்து மிகத் திறமையாகப் பணியாற்றினார்.
 
கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல் நலம் பெரிதும் பாதிக்கப் பட்ட நிலையிலும் கழகத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்ள அவர் தவறியதே இல்லை. இவரது தந்தை பழம்பெரும் சுயமரியாதைக்காரரான பொன்னுசாமி அவர்களால் ஊக்கமும் உற்சாகமும் ஊட்டப்பட்டு, திராவிட இயக்கத்தின் தீபமாய், மாதர்குல திலகமாய் விளங்கிய சற்குணம் நம்மை விட்டுச் சென்று விட்டார்.
 
பேரறிஞர் அண்ணா அவர்களால் “சொல்லின் செல்வி" என்று பாராட்டப்பட்டவர் சற்குணம். கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் மகளிர் படை திரட்டி, அதற்குத் தலைமை தாங்கி சிறை சென்றவர். 1971ஆம் ஆண்டிலேயே இவரது சேவையைப் பாராட்டி, சென்னை மாநகராட்சிக்கு நியமன உறுப்பினராக கழகம் இவரைத் தான் நியமித்தது.
 
உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையிலே சற்குணம் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நான் மருத்துவமனைக்கே சென்று பார்த்து, உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளும்படி கூறி வந்தேன்.
 
தற்காலிகமாக நலம் பெற்றாலும், தொடர்ந்து பல பாதிப்புகளுக்கு ஆளாகி நேற்று நள்ளிரவு சற்குணம் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து தாங்கொணா துயரடைகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும், குறிப்பாக மகளிர் அணியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரயில் கொள்ளை சென்னையில் தான் நடந்துள்ளது - கொள்ளை கும்பல் ரயிலிலேயே பதுங்கி இருந்ததா?