Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு.க.ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் எதிர்கொள்ளத் தயார்: அன்புமணி சவால்!

மு.க.ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் எதிர்கொள்ளத் தயார்: அன்புமணி சவால்!
, வியாழன், 16 ஜூலை 2015 (20:54 IST)
திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்பட்டாலும் அவரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
 

 
பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அன்புமணி ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், www.anbumani4cm.com என்ற இணையதளத்தை பாமகவினர் தொடங்கியுள்ளனர்.
 
சென்னை தியாகராயர் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை நடந்த விழாவில், புதிய இணையதளத்தை அன்புமணி தொடங்கி வைத்தார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி பேசுகையில், ''திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு கால ஆட்சியில் சாராயமும், ஊழலும்தான் அதிகரித்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றத்தை என்னால் கொடுக்க முடியும். எங்கள் மீது சில குறைகள் சொல்லப்படுகின்றன. அவற்றை திருத்திக் கொள்வோம். தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி வேண்டும், கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை. எல்லோரும் காமராஜர் ஆட்சியைத்தான் கேட்கின்றனர். அப்படிப்பட்ட ஆட்சியை எங்களால் கொடுக்க முடியும்.
 
எங்கள் கட்சியில் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளனர். அதேபோல திமுகவில் மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், அவரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
 
மத்திய அமைச்சராக இருந்தபோது பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளேன். புகையிலைப் பொருட்களுக்கு முடிவு கட்டினேன். அதனால் தமிழக முதல்வராக எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இலவசங்கள் கொடுக்க மாட்டோம். விவசாயம், கல்வி, வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் தருவோம். ஜாதி, மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பாடுபடுவோம்'' என்று அன்புமணி பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil