Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
, செவ்வாய், 19 ஜனவரி 2016 (07:38 IST)
தமிழகத்திலுள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை தொடர்பான விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் கே.சண்முகசுந்தரம். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
ஈரோடு மாவட்டம், கதிரம்பட்டி கிராமத்தில் பெரும்பள்ளம் ஓடை உள்ளது. இந்த ஓடையில் உள்ள தண்ணீரை நம்பி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன.
 
அது தவிர மழை காலத்தில் மழை வெள்ளம் இந்த ஓடை வழியாக தங்கு தடையின்றி சென்றால்தான், குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் வராது.
 
ஆனால், இந்த ஓடையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. சுப்ரீம் கோர்ட்டும், இந்த ஐகோர்ட்டும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளது. 
 
ஆனால், இந்த பெரும்பள்ளம் ஓடையில் ஈரோடு தாசில்தார் உத்தரவின்படி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் ஆட்களை வைத்து மண்ணை கொட்டி வருகின்றனர்.
 
இதனால், நீர் ஓட்டம் பாதிக்கப்படுகிறது. கனமழை பெய்தால், குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்து விட வாய்ப்பு உள்ளது.
 
எனவே, பெரும்பள்ளம் ஓடையில் மணல் கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். கொட்டப்பட்ட மணலை எடுத்து, ஓடையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, பி.தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.
 
வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பெரும்பள்ளம் ஓடையை மறித்து சாலைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக மனுதாரர் வழக்கறிஞர் கூறினார்.
 
எனவே, பெரும்பள்ளம் ஓடை மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள ஏரி, ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட எந்த ஒரு நீர் நிலைகளிலும் சாலை உள்ளிட்ட கட்டுமானப் பணிகளையும் அரசு மேற்கொள்ளக்கூடாது.
 
நீர்நிலைகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம்" என்று கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டனர்.
 
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.
 
அதில், பெரும்பள்ளம் ஓடையை மறைத்து கட்டப்பட்டிருந்த ஒரு கட்டுமானத்தை இடித்துவிட்டதாக கூறியிருந்தார்.
 
இதற்கு மனுதாரரின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இடிந்த நிலையில் இருந்த கட்டுமானம் ஒன்றை மட்டும் இடித்துவிட்டு, அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தி வாதிட்டார்.
 
இதையடுத்து நீதிபதிகள், ஈரோடு மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.
 
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

எவ்வளவு ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரிவான அறிக்கையாக வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தாக்கல் செய்ய வேண்டும்.
 
இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil