Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு பயணம்.! முதலீடுகள் எவ்வளவு..? ஸ்டாலினிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் இபிஎஸ்.!!

Senthil Velan
வியாழன், 8 பிப்ரவரி 2024 (11:21 IST)
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில் விடியா திமுக அரசின் முதலமைச்சர் தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலமும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமும் ஈர்த்த முதலீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடுவாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
 
ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில் ஐக்கிய அரேபிய நாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா; பிறகு சிங்கப்பூர் சுற்றுப் பயணம்; 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு; பிறகு ஜனவரி 27-ல் ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம் என்று தமிழ் நாட்டில் அந்நிய தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும் என அயராது, உறங்காது இரவும் பகலும் உழைக்கும் முதலமைச்சரின் முயற்சிகளால், உண்மையிலேயே திமுக ஆட்சியில் 32 மாதங்களில் எவ்வளவு நேரடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்துள்ளன என்றும் அதன்படி எத்தனை தொழிற்சாலைகள் செயல்படத் துவங்கியுள்ளன என்றும் அதன்மூலம் எவ்வளவு நபர்களுக்கு (தமிழர்களுக்கு) வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எவ்வளவு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு அரசை அணுகியுள்ளன என்றும் இந்த அரசு முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென்று சட்டமன்றத்திலும், பேட்டிகளிலும் நான் பலமுறை வலியுறுத்தி உள்ளேன்.
 
நான் நடத்திய ‘உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வந்தவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக, கோட் சூட் அணிந்தவர்களை அழைத்து உட்கார வைத்து GIM 2019 நடத்தியதாக’ அப்போது ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
 
நாங்கள் தொழில் முனைவோர்களை அதுபோன்று கொச்சைப்படுத்த மாட்டோம்; தொழில் முதலீடுகள், தொழில் வளர்ச்சி என்பது ஒரு தொடர் நடவடிக்கை தான் அதை சிறப்பாக நடத்தி முதலீட்டை ஈர்த்தது அம்மாவின் அரசு என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
 
குறிப்பாக, தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான அரசு முறைப் பயணமாக 27.1.2024 அன்று ஸ்பெயினுக்குச் சென்ற விடியா திமுக அரசின் முதலமைச்சர் அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டதாகவும், ஸ்பெயின் நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித் தனியே நேரில் சந்தித்துப் பேசியதாகவும், இதையடுத்து பல தொழில் நிறுவனங்கள் தமிழ் நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளதாகவும், பல நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு நேற்று (7.2.2024), பேட்டி அளித்துள்ளார்.
 
தமிழ்நாடு தொன்றுதொட்டு உற்பத்தி மாநிலமாகத் (Manufacturing State) திகழ்ந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் காரணமாக, தொழில் துறையில் தமிழ் நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
 
1992-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ‘உலகமயமாக்கல்’ மற்றும் ‘தாராள மயமாக்கல் கொள்கைகளை’ இந்தியா ஏற்று செயல்படுத்தியதன் காரணமாக, பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வந்தன.

மாண்புமிகு அம்மா அவர்களின் சாதுரியத்தாலும், தொலைநோக்கு மற்றும் சிறந்த அறிவாற்றலாலும் தமிழ் நாட்டிற்கு பல பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்கினார்கள். 2015-ல் உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். இதன் காரணமாக, தமிழ் நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலமாக மாறியது. அதாவது, மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து தமிழ் நாடுதான் உள்நாட்டு உற்பத்தி 8.47 பங்களிப்பை அளித்து இந்தியாவின் முக்கிய தொழில் வளம் மிக்க மாநிலம் என்ற பெயரைப் பெற்றது.
 
குறிப்பாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் அமைதியான சட்டம்-ஒழுங்கு, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள், தடையில்லா மின்சாரம், திறன் வாய்ந்த தொழிலாளர்கள் போன்ற சிறப்பு அம்சங்களை ஏற்படுத்தி, அதனை உலகிற்கு எடுத்துரைக்கும் விதமாகவும், அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும் 2015 மற்றும் 2019 ஆண்டுகளில், இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலம் அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டது. அதில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் முறையே சுமார் 60ரூ மற்றும் சுமார் 90ரூ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் எனது தலைமையிலான ஆட்சியில், தொழில் நிறுவனங்கள் / தொழில் முதலீட்டாளர்கள் எளிதில் என்னை அணுகக்கூடிய வகையில் இருந்ததால், கோவிட் பெருந்தொற்று காலத்தில்கூட பல தொழில் முதலீடுகளை ஈர்க்க முடிந்தது. ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டு, எனது தலைமையிலான உயர்மட்டக் குழுவில் தொழில் முதலீட்டாளர்களின் குறைகள் உடனடியாக களையப்பட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொழில் வளம் பெருகியது. ஆனால், விடியா திமுக ஆட்சியில் உயர்மட்டக் குழு, அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டதால் எந்தவிதமான பயனுமில்லை. மீண்டும் கோப்புகள் பல அமைச்சர்கள் வழியாக முதலமைச்சர் வரை செல்ல வேண்டியுள்ளது.
 
2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் முதலீட்டினைக் கொண்டு வருவேன் என்று கூறியதற்கு இதுநாள்வரை வரைவு அறிக்கை எதுவும் விடியா தி.மு.க. அரசால் வெளியிடப்படவில்லை.
 
திரு. ஸ்டாலின் அவர்கள், ஸ்பெயின் பயணத்தினால் தமிழகத்திற்கு மூன்று நிறுவனங்கள் மூலம் 3,440 கோடி ரூபாய் முதலீட்டிற்கான உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பல நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமிழ் நாட்டில் முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
 
இருபது நாட்களுக்கு முன்பு, சென்னையில் பல கோடி ரூபாய் செலவழித்து உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியபோதே, ஸ்பெயின் நாட்டின் முதலீட்டாளர்களையும் அழைத்திருக்கலாமே. ஆனால் 20 நாட்கள்கூட முடியாத நிலையில், மீண்டும் முதலமைச்சர் ஸ்பெயினுக்கு சுற்றுப் பயணம் செய்து முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டது முதலீட்டை ஈர்க்கவா? அல்லது முதலீடு செய்யவா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. இதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும்.
 
மேலும், தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ள 3 நிறுவனங்களில், 2 நிறுவனங்களின் அலுவலகங்கள் சென்னை மற்றும் பெருந்துறையில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஸ்பெயின் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது ஏன் என்பதை முதலமைச்சர்தான் விளக்க வேண்டும்.

ALSO READ: நிதி வழங்குவதில் பாரபட்சம்..! டெல்லியில் திமுக எம்பிக்கள் போராட்டம்..! மத்திய அரசை கண்டித்து முழக்கம்..!!
 
எனவே, விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 32 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் ஏன் எப்போதும் பயங்கரவாதிகளுடன் நிற்கிறது? - யாசின் மாலிக் மனைவி கடிதத்தை வைத்து பாஜக கேள்வி!

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: பெண் ஒருவர் தற்கொலை முயற்சி..!

டிரம்ப் வெற்றியால் உயர்ந்த பங்குச்சந்தை.. மீண்டும் சரிவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!

என்ன ஹேர் ஸ்டைல் இது? காதலியை தேடிச் சென்று கொன்ற காதலன்! - அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments