Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க வேண்டுமா? சிறப்பு நடுவர் மன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க வேண்டுமா? சிறப்பு நடுவர் மன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு
, வியாழன், 6 நவம்பர் 2014 (17:16 IST)
விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சிறப்பு நடுவர் மன்றம், தனது தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
 
தில்லி உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு நடுவர் மன்றம், மத்திய அரசின் வழக்குரைஞர் அனில் சோனி, தமிழக அரசு சார்பில்  ஆஜரான வழக்குரைஞர் யோகேஷ் கன்னா உள்ளிட்ட பலரின் வாத, பிரதி வாதங்களைக் கேட்டறிந்தது. இதன் பின்னர் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாக, சிறப்பு நடுவர் மன்றத்தின் தலைவர் நீதிபதி ஜி.என்.மிட்டல் நேற்று அறிவித்தார்.
 
1992ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள், தொடர்ந்து இந்தியாவின் இறையாண்மைக்கும் பிராந்திய ஒருங்கிணைப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப்புகள் மூலமும் இத்தகைய அச்சுறுத்தல் இருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் யோகேஷ் கன்னா தன்னுடைய வாதத்தில், ''விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவில் சில குழுக்கள் செயல்பட்டன. இதனால், அவற்றின் உறுப்பினர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2012, மே 14 முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலர் மீது வெடிமருந்து சட்டங்களின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 
 
விடுதலைப் புலிகளுக்குச் சாதகமாகவும், அவர்களின் தனி ஈழம் குறித்த கோரிக்கையை ஆதரித்தும் இணையத்தளங்கள் மூலம் வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள், இலங்கையில் விடுதலைப் புலிகளை வீழ்த்த இந்திய அரசே காரணம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இத்தகைய பிரசாரங்களால் இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பிரிவினையைத் தூண்டும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாகக் கருதி தடையை நீட்டிக்க வேண்டும்'' என்று அவர் வாதிட்டார்.
 
விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நீதிபதி ஜி.பி.மிட்டல் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil