தமிழகத்தில் படிப்படியான மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுவிலக்கு தொடர்பான கோஷங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகளும் மறக்காமல் கொடுத்த ஒரே வாக்குறுதி பூரண மதுவிலக்கு என்பதாகும். ஆனால் அதிமுக ஒரே அடியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியாது, படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது.
மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்ததும், தங்கள் வாக்குறுதியின் படி முதல் கட்டமாக 500 கடைகளை மூட உத்தரவிட்டது. மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தையும் குறைத்தது.
ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புக்கு பலதரப்பட்ட மக்கள் பாராட்டு தெரிவித்தாலும், சிலர் இதனால் எந்த பயனும் இல்லை எனவும் கூறினர்.
இந்நிலையில் அடிக்கடி சர்ச்சைக்குறிய வகையில் பேசும் எச்.ராஜா மதுரை மாவட்டம் மேலூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பதில் நம்பிக்கை இல்லை. ஒரே நாளில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் மட்டும் தான் மதுவை ஒழிப்பது சாத்தியமாகும் என்று தெரிவித்தார்.