Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆளுனர் அதிமுகவின் விசுவாசி என்பதை நிரூபித்துள்ளார் - ராமதாஸ் கண்டனம்

ஆளுனர் அதிமுகவின் விசுவாசி என்பதை நிரூபித்துள்ளார் - ராமதாஸ் கண்டனம்
, வெள்ளி, 27 மே 2016 (12:15 IST)
தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளதன்மூலம் ஆளுனர் என்பதைத் தாண்டி அதிமுகவின் விசுவாசி என்பதை அவர் நிரூபித்துள்ளார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாற்றின் அடிப்படையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விரைவாக, முடிந்தால் இம்மாத இறுதியில் வாக்குப்பதிவை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஆளுனர் ரோசய்யா பரிந்துரைத்திருக்கிறார். ஒரு தலைபட்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
 
ஒத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதில் ஆளுனர் காட்டும் ஆர்வமும், கடமை உணர்ச்சியும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. இரு தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் கடந்த 22ஆம் தேதி ஆளுனரை சந்தித்து  பேசியுள்ளனர்.
 
அப்போது, ‘‘இரு தொகுதிகளின் தேர்தல் ஆளுனரின் ஒப்புதல் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான குற்றச்சாற்றுக்களை நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும். அதற்காக தேர்தலை ஒத்திவைத்தால் அத்தொகுதிகளில் வெற்றி பெறும் சட்டப்பேரவை உறுப்பினர்களின்  பதவிக்காலம் குறைந்து விடும். எனவே ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை உடனடியாக நடத்த ஆணையிட வேண்டும்’’ என்று ஆளுனரிடம் அதிமுக வேட்பாளர்கள் மனு அளித்துள்ளனர்.
 
மனுவை பெற்றுக் கொண்ட ஆளுனர் அடுத்த நாளே தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியை அழைத்து இதுகுறித்து விசாரித்துள்ளார். இதுதொடர்பான தேர்தல் ஆணையத்தின் விளக்க அறிக்கையை 24ஆம் தேதி ஆளுனர் ரோசய்யாவிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தாக்கல் செய்திருக்கிறார்.
 
தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்த ஆளுனர், ‘‘இரு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் அத்தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழந்து விடுவார்கள்.
 
எனவே அனைவரின் நலன் கருதி இரு தொகுதிகளிலும் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகவும், முடிந்தால் ஜூன் ஒன்றாம் தேதிக்கு முன்பாகவும் தேர்தலை நடத்த வேண்டும்’’ என்று ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.
 
இதன்மூலம் ஆளுனர் என்பதைத் தாண்டி அதிமுகவின் விசுவாசி என்பதை அவர் நிரூபித்துள்ளார். தேர்தல் நடைமுறையில் இதுவரை எந்த ஆளுனரும் இவ்வளவு வெளிப்படையாக குறுக்கிட்டதில்லை. தேர்தல் நடைமுறையில் ஆளுனர் ஒரு கருவி தானே தவிர, அவருக்கு அதிகாரம் எதுவும் இல்லை. தேர்தல் குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு. 
 
சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிக்கையை ஆளுனர் தான் வெளியிடுவார் என்ற போதிலும், தேர்தல் தேதிகளை அவர் முடிவு செய்வதில்லை. ஆணையம் முடிவு செய்யும் தேதியை உள்ளடக்கிய தேர்தல் அறிவிக்கையை அவர் வெளியிடுவார். அது மட்டுமே அவரது பணி. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தேர்தலை ஆணையம் ஒத்திவைத்தால் அதில் குறுக்கிடும் அதிகாரம் யாருக்கும் கிடையாது
 
தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குகள் ரூ.500 முதல் ரூ.5000 வரை விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் ரூ.5000 பணத்துடன் இருசக்கர ஊர்தி, குளிர்பதனப் பெட்டி, துணி துவைக்கும் எந்திரம் ஆகியவையும் வழங்கப்பட்டிருக்கின்றன.
 
இந்த அளவு  ஜனநாயகப்படுகொலை நடந்துள்ள நிலையில், அதை ஓரளவு சரி செய்யும் நோக்குடன் தான் இரு தொகுதிகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இதுவே போதுமானதல்ல; இரு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டு வருகிறது.
 
ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைப்பதன் மூலம் அதிமுகவின் குரலாக மாறி ஜனநாயகப் படுகொலைக்கு துணை போயிருக்கிறார் ஆளுனர் ரோசய்யா. தமிழக அரசின் ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் பாமக அளித்த புகார் மனு மீது ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்காத ஆளுனர், இப்போது அதிமுக வேட்பாளர்கள் அளித்த புகார் மனு மீது ஒரே நாளில் நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம் தாம் யார்? என்பதை வெளிப்படையாக அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
 
இப்படிப்பட்டவர் தமிழகத்தின் ஆளுனராக தொடர்ந்தால், அது ஜனநாயகப் படுகொலைகள் தொடரவே வழி வகுக்கும். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லை என்று ஒரு காலத்தில் திமுக எழுப்பிய முழக்கத்தை நியாயப்படுத்தும் வகையில் தான் ஆளுனரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
 
அதேபோல், தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதியாக செயல்படும் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி தேர்தல் நடைமுறை முடிவடையும் முன் ஆளுனரை சந்தித்ததும், விளக்க அறிக்கை  தாக்கல் செய்ததும் தவறு.
 
எனவே, தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற ஆளுனரின் பரிந்துரையை ஆணையம் ஏற்கக்கூடாது. அதுமட்டுமின்றி, ஆளும்கட்சிக்கு சாதகமாக ஜனநாயகப் படுகொலைக்கு துணை போகும் தமிழக ஆளுனர் ரோசய்யாவை மத்திய அரசும், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை இந்திய தேர்தல் ஆணையமும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடம் பிடிக்கும் ராமதாஸ்