Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உற்பத்தியாளர்களிடம் பால் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும் : கருணாநிதி

உற்பத்தியாளர்களிடம் பால் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும் : கருணாநிதி
, வியாழன், 8 அக்டோபர் 2015 (20:36 IST)
தமிழக அரசு, உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று திமுக. தலைவர் கருணாநிதி  கூறியுள்ளார். 
 
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
 
"தமிழகத்தில் அண்மைக் காலமாக ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலைப் பல வழிகளிலும் குறைத்து விட்டது. விவசாயிகள் பாலைக் கறந்து கூட்டுறவு சங்கங்களுக்குக் கொண்டு வந்தால், அந்தப் பாலை முழுவதுமாகக் கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். கொள்முதல் செய்யும் பாலுக்கான பணத்தையும் உடனடியாகப் பட்டுவாடா செய்யாமல் இழுத்தடிக்கிறார்களாம்.  
 
பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதால், அவர்கள் ஆங்காங்கே கறந்த பாலை சாலையிலே கொட்டுவது உள்ளிட்ட பல்வேறு வகைப் போராட்டம் நடத்தியும், இந்த அரசினர் அதைப்பற்றிக் கவலையே படுவதில்லை.
 
ஆவின் பால் நிறுவனத்திலே நடைபெற்ற கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் வெளிவந்து, அந்தத் துறைக்குப் பொறுப்பேற்ற அமைச்சர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதற்குப் பிறகு திரைமறைவில் என்ன நடந்ததோ?. அந்த வழக்கே குப்பைக் கூடைக்குப் போய்விட்டது.  
 
தற்போது பால் உற்பத்தி 2.02 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது என்றும், அதே நேரம் பால் கொள்முதல் விலை முறைப்படுத்தப்படாத காரணத்தால், பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 2,628 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்றும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
 
ஆவின் நிறுவனம் ஒரு லிட்டர் பாலை 28 ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என்றால், தனியார் பால் பெரிய நிறுவனங்கள் லிட்டர் 22 ரூபாய்க்கும், சிறிய அளவிலான வியாபாரிகள் ஒரு லிட்டர் 16 ரூபாய்க்கும் தான் கொள்முதல் செய்கிறார்கள். இதன் காரணமாகத் தான் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு 2,628 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. 
 
பால் உற்பத்தியாளர்களின் இந்தப் பிரச்சினையைப் போக்க அ.தி.மு.க. அரசு ஆவின் நிறுவனம்  மூலமாக உற்பத்தியாளர்களிடம் உள்ள எல்லா பாலையும் அதற்குரிய பணத்தைக் கொடுத்து, தானே கொள்முதல் செய்து, பாலாக மக்களுக்கு விற்பனை செய்தது போக, மீதமுள்ள பாலை பவுடராக மாற்றி சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு அந்தப் பால் பவுடரைப் பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும்.

ஒவ்வொரு பிரச்சினையையும் எதிர்க்கட்சிக்காரர்கள் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று காத்திருக்காமல், ஆட்சியாளர்களே இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் முயற்சியில் ஈடுபடுவது தான் நல்ல நிர்வாகத்திற்கு அழகு. இனியாவது ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil