Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவர்களின் தற்கொலையை தடுக்க திட்டங்கள் வேண்டும் : ராமதாஸ்

மாணவர்களின் தற்கொலையை தடுக்க திட்டங்கள் வேண்டும் : ராமதாஸ்
, செவ்வாய், 22 டிசம்பர் 2015 (21:59 IST)
தமிழகத்தில் அடிக்கடி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


 

 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
 
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த வாரம் உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ஓர் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருக்கிறார். மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பது தான் அந்த செய்தி ஆகும். அது அதிர்ச்சி மட்டுமல்ல, கவலையும் அளிக்கும் செய்தியாகும்.
 
2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 8068 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிகபட்சமாக மராட்டியத்தைச் சேர்ந்த மாணவர்கள் 1191 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அடுத்தபடியாக தமிழகத்தைச் சேர்ந்த 853 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டில் மட்டுமின்றி அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. 2013 ஆம் ஆண்டில் 866 மாணவர்களும், 2012 ஆம் ஆண்டில் 795 மாணவர்களும், 2011 ஆம் ஆண்டில் 849 மாணவர்களும் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் மாணவர்கள் தற்கொலை அதிக அளவில் நடந்திருப்பதை அறிய முடிகிறது.
 
மாணவர்களின் தற்கொலைக்கான காரணங்களில் முதலிடம் பிடித்திருப்பது ‘தேர்வில் தோல்வி’ ஆகும். 2014 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட 853 பேரில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர், அதாவது 247 பேர் தேர்வில் தோற்றதால் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் கிராமப்புற மாணவர்கள் ஆவர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய தமிழகத்தின் 4 பெரிய நகரங்களில் தேர்வில் தோல்வியடைந்ததற்காக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 29 மட்டுமே. மீதமுள்ள மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.
 
தமிழ்நாட்டின் மோசமான கல்வி முறையும், குழந்தைகளின் குறைகளை கேட்க முடியாத, ஆனால் குழந்தைகள் மிக அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெற்றோரும் தான் இத்தனை தற்கொலைகளுக்கும் காரணம் ஆவர். கல்வி என்பது வாழ்வதற்கான பல்வேறு தேவைகளில் ஒன்று என்பதை மறைத்து, தேர்வில் தோல்வியடைந்து விட்டால் வாழ்க்கையே போய்விடும் என்ற அர்த்தமற்ற எச்சரிக்கை சிறுவயதில் இருந்தே மாணவர்களின், குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் மனதில் விதைக்கப்படுகிறது.
 
இதனால் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் இனி வாழ்ந்து எதை சாதிக்கப்போகிறோம் என்ற விரக்தியில் தற்கொலை மூலம் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.
 
இன்னொருபுறம் மாணவர்களின் மன அழுத்தம் அவர்களை மரணத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. கல்வி என்பது சுகமானதாகவும், சுமையற்றதாகவும் இருக்க வேண்டும். ஆனால், தமிழக பாடத்திட்டம் மனப்பாடத்தை ஊக்குவிப்பதாக அமைந்திருக்கிறது; சிந்தனைத் திறனைத் தூண்டுவதாக இல்லை. சிந்தனையைத் தூண்டும் கல்வியாக இருந்தால் அது சுகமான அனுபவத்தைக் கொடுக்கும்; சிந்தனையின் போக்கில் பல புதிய விஷயங்களைப் படிக்கத் தூண்டும்.
 
ஆனால், மனப்பாட கல்வி முறையால் பள்ளியிலும், பள்ளி முடிந்த பின் வீட்டிலும் எந்த நேரத்திலும் புரியாத, பிடிக்காத பாடத்தை படிக்க வேண்டியிருக்கிறது. இது மாணவர்கள் மத்தியில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அந்த அழுத்தத்திற்கு பெற்றோரிடம் வடிகால் தேட மாணவர்கள் முயலும் போது, அதை பெற்றோர் புரிந்து கொள்வதில்லை. இதனால் நம்பிக்கை இழக்கும் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
 
மாணவர்களைப் போலவே வேலையில்லாதோரும் அதிகளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர். 
 
தமிழகத்தில் 2014 ஆம் ஆண்டில் தற்கொலை செய்தவர்களில் 1730 பேரும், 2013 ஆம் ஆண்டில் 1509 பேரும், 2012 ஆம் ஆண்டில் 1938 பேரும், 2011 ஆம் ஆண்டில் 2234 பேரும் வேலையற்ற இளைஞர்கள் ஆவர். மாணவர்களின் தற்கொலைகளுக்கு கூறப்பட்ட அனைத்துக் காரணங்களும் இதற்கும் பொருந்தும். படிப்பதில் உள்ள சிரமமும், படித்தபின் வாழ்வதில் ஏற்படும் பிரச்சினைகளும் ஆண்டுக்கு சுமார் 2500 பேரின் தற்கொலைகளுக்கு வழி வகுக்கின்றன என்றால் அது ஒதுக்கித் தள்ளிவிட்டு செல்லும் விஷயமல்ல. நடைமுறைக்கு உதவாத பாடத்திட்டம் தான் இவ்வளவுக்கும் காரணம் ஆகும்.
 
அதை புறம்தள்ளிவிட்டு சுகமான, சிந்தனையைத் தூண்டும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க கூடிய கல்வி முறையையும், எளிமையான தேர்வு முறையையும் அறிமுகம் செய்வது தான் இத்தகைய தற்கொலைகளை தடுக்க உதவும். இதை உணர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு மாணவர்கள் சமுதாயத்தை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil