Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களின் கல்விக்கடனை அரசே ஏற்க வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2016 (15:10 IST)
மாணவர்களுக்கு வங்கிகள் நெருக்கடி கொடுப்பதால், அவர்களுக்கான கல்விக்கடனை அரசே ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:
 
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால், கல்விக் கடன் வாங்கி கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் நெருக்கடி என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. கல்விக் கடன் பெற்று உயர்கல்வி கற்றவர்கள் வேலை கிடைக்காமலும், வாங்கிய கடனை கட்ட முடியாமலும் தவிக்கின்றனர். அவர்களை கைதூக்கி விட வேண்டிய அரசுகள் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
 
ஒரு காலத்தில் வேலைக்கு உத்தரவாதமுள்ள கல்வி என்று போற்றப்பட்ட பொறியியல் படிப்பு, இப்போது அதன் தரத்தை இழந்து நிற்கிறது. பொறியியல் படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. இதற்கு காரணம் தகுதியற்ற கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் தரமற்ற பொறியியல் படிப்பு தான். பெரும்பாலும் ஏட்டுக் கல்வியை மட்டுமே படிக்கும் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியோ, தொழில் பயிற்சியோ வழங்கப்படாததால் அவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் கிடைப்பதில்லை. அதன் விளைவு தமிழகத்தில் 70% பொறியியல் பட்டதாரிகள் வேலையின்றி தவிக்கின்றனர். இந்தியாவில் வேலையில்லாத பொறியியல் பட்டதாரிகள் அதிகமுள்ள மாநிலம் தமிழகம் தான் என மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகளில் வழங்கப்படுவது தரமற்ற பொறியியல் படிப்பு தான்; அதைப் படித்தால் வேலைவாய்ப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்ற போதிலும், கல்விக் கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளைக்கு மட்டும் அளவில்லை. தனியார் கல்லூரிகள் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை செலுத்த வசதியில்லை என்ற போதிலும், தங்கள் குழந்தைகள் பொறியாளர் ஆக வேண்டும் என்பதற்காக ஏராளமான பெற்றோர்கள் வங்கிகளில் கல்விக்கடன் வாங்கியாவது பொறியியல் படிப்பு வைக்கின்றனர். ஆனால், பொறியியல் படித்தும் வேலைவாய்ப்புக்கு வழியில்லை என்பதால் அவர்களே குடும்பத்திற்கு சுமையாகி விடுகின்றனர். அவர்களுக்காக வாங்கப்பட்ட கல்விக் கடன் கூடுதல் சுமையாகி விடுகிறது. தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கல்விக் கடன் மற்றும் அதற்கான வட்டியின் சுமை தாங்க முடியாமல் தவிக்கின்றன.
 
2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை அரசே திரும்பச் செலுத்தும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 20 நாட்களுக்கு மேலாகியும் கல்விக்கடன் குறித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து எந்தவொரு அறிவிப்பையும் ஜெயலலிதா தலைமையிலான அரசு வெளியிடவில்லை. மற்றொருபுறம் நடப்புக் கல்வி ஆண்டில் கடன் வழங்குவதற்கு முன்பாக கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட கல்விக்கடனை திரும்ப வசூலிக்கும் நடவடிக்கைகளில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
 
கல்விக்கடன் வாங்கிய மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாக செல்லும் வங்கிகளின் அதிகாரிகள், கல்விக் கடன் பாக்கியை வட்டியுடன் உடனடியாக திருப்பிச் செலுத்தும்படி நெருக்கடி தருகின்றனர். சில இடங்களில் கல்விக் கடனை திரும்பச் செலுத்தாத மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் படங்களை செய்தித் தாள்களில் வெளியிட்டு அவமானப்படுத்தப் போவதாகவும் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே, வேலை கிடைக்காமலும், புதிய வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு கூட பணமின்றியும் மாணவர்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் வங்கிகள் தரப்பில் அளிக்கப்படும் இந்த நெருக்கடி மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் மிகக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலை நீடித்தால் அது மிக மோசமான, ஈடு செய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தி விடக்கூடும்.
 
இந்த நிலையை தடுக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை ஆகும். கல்விக்கடனை திரும்பச் செலுத்தாததால் இந்தியாவில் எந்த பொதுத்துறை வங்கியும் நஷ்டமடைந்ததாக சரித்திரம் இல்லை. மாறாக, மல்லையாக்கள் போன்ற பெருந்தொழிலதிபர்கள் தொழில் செய்வதாக கடன் வாங்கி அதை வெளிநாடுகளில் பதுக்கி விட்டு தப்பிச் ஓடுவதால் தான் வங்கிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. வங்கிகளுக்கு பெருந்தொழிலதிபர்கள் திருப்பிச் செலுத்தாத கடனை தள்ளுபடி செய்வதற்காக நிதி ஒதுக்கியதால் மட்டும் கடந்த 3 மாதங்களில் வங்கிகளுக்கு ரூ.19,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதற்கும் தவனை தவறிய கல்விக்கடனின் அளவு நிச்சயமாக இதைவிடக் குறைவாகவே இருக்கும். தொழிலதிபர்களிடம் கடனை வசூலிப்பதில் கருணை காட்டும் வங்கிகள், மாணவர்களிடம் மட்டும் கடுமை காட்டுவது கண்டிக்கத்தக்கது. படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் மாணவர்கள் நலன் கருதி அவர்கள் பணியில் சேர்ந்த பின் கடனை செலுத்தும் வகையில் விதிகளை திருத்தவேண்டும்.
 
அதேபோல், அ.தி.மு.க அரசு அதன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், வேலையில்லா பட்டதாரிகளின் கல்விக்கடனை செலுத்த முன்வர வேண்டும். இதற்கான அறிவிப்பை ஆளுனர் உரையில் வெளியிட்டு, அதுகுறித்த விவரங்களை வங்கிகளுக்கு தெரிவித்து, கல்விக்கடனை செலுத்த முடியாத மாணவர்களுக்கு வங்கிகள் சார்பில் அளிக்கப்படும் நெருக்கடியை தடுத்து நிறுத்த வேண்டும்”  என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜியோ ஹாட்ஸ்டார் இல்ல.. இனிமேல் JioStar தான்..! ஜியோ டிஸ்னி இணைப்பின் புதிய தளம்!

முஸ்லிம் வாக்குகள் எங்களுக்கு தேவையில்லை: பாஜக பேச்சால் சர்ச்சை

13 எம்.எல்.ஏ வீடுகளுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்! பற்றி எரியும் மணிப்பூர்! - அமித்ஷா எடுக்க போகும் நடவடிக்கை என்ன?

தமிழுக்கு பதிலாக பிரெஞ்ச் மொழி படிக்கிறேன்: அமைச்சர் அன்பில் மகேஷ் மகன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments