Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் ஏழை குடும்பங்களுக்கு இலவச மினரல் வாட்டர்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னையில் ஏழை குடும்பங்களுக்கு இலவச மினரல் வாட்டர்: ஜெயலலிதா அறிவிப்பு
, ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (10:03 IST)
சென்னையில் ஏழை, எளிய மக்களுக்கு மினரல் வாட்டர் என சொல்லப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெற வழிவகுக்கும் வகையில் அம்மா குடிநீர் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஏழை குடும்பத்திற்கு நாளொன்றுக்கு 20 லிட்டர் என்ற அளவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.


 
 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் கூட்டு குடிநீர் திட்டம், ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் வழங்கும் திட்டம், தனி மின் விசை திட்டம் என எண்ணற்ற குடிநீர் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. 
 
கடந்த 56 மாதங்களில் 41 கூட்டு குடிநீர் திட்டங்கள் மற்றும் இதர குடிநீர் திட்டங்கள், 7,324 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 6,602 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான 69 திட்டப்பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. 
 
இதன் காரணமாக அனைத்து குடியிருப்புகளும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை உள்ள 69 ஊரக குடியிருப்புகள் மற்றும் 30 பேரூராட்சிகள் ஆகியவற்றில் எதிர்மறை சவ்வூடு பரவுதல் நிலையங்கள் அமைத்து குடிநீர் வழங்கிட நான் ஏற்கனவே உத்தரவிட்டதன் அடிப்படையில் அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
சென்னை நகரில் வசதி படைத்தோர், ‘‘மினரல் வாட்டர்’’ என்று பொதுவாக சொல்லப்படும் எதிர்மறை சவ்வூடு பரவுதல் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த குடிநீரை தாங்களும் வாங்கிப்பருக வேண்டும் என்பது ஏழை, எளிய மக்களின் விருப்பமாகும். இதனை நிறைவேற்றும் வகையில், ‘அம்மா குடிநீர் திட்டம்’ என்ற ஒரு புதிய திட்டத்தினை செயல்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன். 
 
இதன்படி, முதற்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் ஏழை. எளிய மக்கள் அதிகம் வசிக்கும் 100 தெரிந்தெடுக்கப்பட்ட இடங்களில் எதிர்மறை சவ்வூடு பரவுதல் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் அமைக்கப்படும். 
 
இவை ஒவ்வொன்றும் மணிக்கு 2,000 லிட்டர் நீர் சுத்திகரிப்புத் திறன் கொண்டதாக இருக்கும். தேவைக்கேற்ப இதன் செயல்திறன் அதிகரிக்கப்படும். 
 
இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆய்வகங்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டு அதன் தரம் உறுதி செய்யப்படும். 
 
பொதுமக்களுக்கு விலை ஏதுமின்றி இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடும்பம் ஒன்றுக்கு நாளொன்றுக்கு 20 லிட்டர் என்ற அளவில் வழங்கப்படும்.
 
இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் ஏழை, எளிய மக்கள் குடிநீர் சுத்திகரிப்பு தானியங்கி நிலையத்திலிருந்து எளிதில் குடிநீர் பெறும் வகையில் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும்.
 
எனது அரசின் இந்த நடவடிக்கை, ஏழை, எளிய மக்களும் ‘மினரல் வாட்டர்’ என சொல்லப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெற வழிவகுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil