Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உணவு மானியத்தை பணமாக வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

உணவு மானியத்தை பணமாக வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
, வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (11:45 IST)
பொது வினியோக திட்டத்தின் நோக்கத்திற்கே எதிரான, உணவு மானியத்தை பணமாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
பொதுவினியோக திட்டத்தின்படி நியாயவிலை கடைகளில் உணவு தானியங்கள் வழங்குவதை கைவிட்டு, அதற்கு பதிலாக நுகர்வோருக்கு உணவு மானியத்தை அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.
 
சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இச்சீரழிவு நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்திய உணவுக்கழகத்தை சீரமைப்பதற்காக பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சாந்தகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி அதன் அறிக்கையை பிரதமரிடம் தாக்கல் செய்தது. 
 
உணவுப் பாதுகாப்பு சட்டப்படி பயனடைபவர்களின் எண்ணிக்கையை 67 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக குறைக்க வேண்டும்; உணவு பாதுகாப்பு சட்டத்தின் நிபந்தனைகளை ஏற்க மறுக்கும் மாநிலங்களில் அந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது ஆகியவை தான் சாந்தகுமார் குழு அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் ஆகும்.
 
அத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் நியாயவிலை கடைகளில் அரிசி, சர்க்கரை போன்ற உணவுப்பொருட்களை வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கான மானியத்தை சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தலாம் என்பது அடுத்த பரிந்துரையாகும்.
 
சாந்தகுமார் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுமே அதில் உள்ள பரிந்துரைகளை ஏற்கக்கூடாது என்றும், அவற்றை செயல்படுத்தினால் நியாயவிலை கடைகளை மூட வேண்டிவரும் என்றும் மத்திய அரசை எச்சரித்திருந்தேன்.
 
இப்பரிந்துரைகளை நாடு முழுவதும் ஒரே நேரத்தில், ஒட்டுமொத்தமாக செயல்படுத்தினால் மக்கள் கொதித்து எழுவார்கள் என்பதை உணர்ந்துள்ள மத்திய அரசு, இவற்றில் முதல் இரு பரிந்துரைகளை விடுத்து கடைசி பரிந்துரையை மட்டும் செயல்படுத்த தீர்மானித்திருக்கிறது.
 
உணவுப்பொருட்களை மானிய விலையில் வழங்குவதற்கு பதிலாக உணவு மானியத்தை பணமாக வழங்க வேண்டும் என்ற இந்த பரிந்துரையை முதல் கட்டமாக யூனியன் பிரதேசங்களில் மட்டும் அறிமுகப்படுத்த முடிவு செய்திருக்கிறது.
 
இத்திட்டத்தை செயல்படுத்துவது பற்றி அனைத்து யூனியன் பிரதேச அரசுகளுக்கும் பிப்ரவரி 10 ஆம் தேதி மத்திய உணவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. உணவு மானியத்தை பணமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினால், ஆண்டுக்கு குறைந்தது ரூ.30,000 கோடி மிச்சமாகும் என்ற எண்ணத்தில்தான் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு துடிக்கிறது. 
 
ஆனால், இது பொது வினியோக திட்டத்தின் நோக்கத்திற்கே எதிரானது ஆகும். ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் பொதுவினியோக திட்டம் கொண்டுவரப்பட்டது.
 
உழவர்களின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் நேரடி கொள்முதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இப்பரிந்துரை உன்னதமான இரு திட்டங்களையும் அழித்துவிடும். அத்தகைய சூழலில் ஏழை மக்கள் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து உணவு தானியங்களை வாங்கும் நிலையும், உழவர்கள் தங்களின் விளை பொருட்களை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்கும் நிலையும் ஏற்படும்.
 
அப்படி ஒரு நிலை உருவானால் ஏழைகளும், விவசாயிகளும் வாழ முடியாத நிலை உருவாகும். எனவே, பொதுவினியோக திட்டத்தையும், விவசாயத்தையும் அழிக்கும் சக்தி கொண்ட இந்த பரிந்துரையை செயல்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil